ஜோகூர் பாரு:
ஜாலான் பந்தாய் (Jalan Pantai) சாலையில் சிக்னலுக்காகக் காத்திருந்த நான்கு வாகனங்கள் மீது கட்டுப்பாட்டை இழந்த லோரி ஒன்று மோதியதில் ஐந்து வாகனங்கள் தொடர் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று (ஜனவரி 7, 2026) மதியம் 12.15 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
ஜாலான் பந்தாய், கி.மீ 3.7, மாநகர் மையத்தை நோக்கிச் செல்லும் பகுதியில், பாசிர் கூடாங்கிலிருந்து பெர்மாஸ் உத்தாரா நோக்கிச் சென்ற லாரி, சிக்னலை நெருங்கியபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் நின்றிருந்த கார்கள் மீது மோதியது என்று, ஜோகூர் பாரு தெற்கு மாவட்டப் போலீஸ் தலைவர் ஏ.சி.பி ராவுப் செலாமாட் கூறினார்.
லோரியைத் தவிர ஏனைய வாகனங்கள் விபத்தில் சேதமடைந்ததாக அவர் சொன்னார், அதில் 66 வயது முதியவர் ஓட்டிய Chery Omoda, 58 வயது நபர் ஓட்டிய Toyota Vios, 70 வயது நபர் ஓட்டிய Toyota Hilux ஆகியன சேதமடைந்தன. இதில் சிங்கப்பூரர் ஒருவருக்குச் சொந்தமான Toyota Premio தொடர்பில் யாரும் இன்னும் போலீஸ் புகார் அளிக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் சிக்கிய ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
லோரி ஓட்டுநரின் அஜாக்கிரதையால் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து, சாலை போக்குவரத்து விதிகள் 1959-இன் 10-ஆவது விதியின் கீழ் (வாகனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறியது) விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
























