கோலா திரெங்கானு:
கம்போங் குபாங் புயோங் பகுதியில் நேற்று இரவு 7.50 மணியளவில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் மூன்று வீடுகள் பலத்த சேதமடைந்தன. இதில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் பாதுகாப்பாக வெளியேறினர்.
இந்த சம்பவத்தில் இரண்டு வீடுகள் 80 சதவீதம் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. மூன்றாவது வீடு 5 சதவீதம் சேதமடைந்தது.
வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டுள்ளது. வெளியே வந்து பார்த்தபோது, பக்கத்து வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறுவதைக் கண்டுள்ளனர்.
இது தொடர்பில் 41 வயது நஜிஹா ராசெட் கூறுகையில், “முதலில் விபத்து என்று நினைத்தேன். ஆனால் புகை மூட்டத்தைப் பார்த்ததும் பதறிப்போய் வீட்டிற்குள் சென்று என் தாயையும் குழந்தைகளையும் மீட்டேன். எங்களால் எதையும் எடுத்து வர முடியவில்லை, உடுத்தியிருந்த உடைகளுடன் உயிர் தப்பி வந்தோம்,” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
நஜிஹாவின் மாமா வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் (Gas Cylinder) வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என நம்பப்படுகிறது.
கோலா திரெங்கானு மற்றும் ஜாலான் கோத்தா நிலையங்களைச் சேர்ந்த 20 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பலத்த காற்று வீசிய நிலையிலும், தீ மற்ற வீடுகளுக்குப் பரவாமல் அவர்கள் தடுத்தனர்.
இரவு 8.13 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் உயிர்ச்சேதமோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை. விபத்துக்கான சரியான காரணம் மற்றும் சொத்து இழப்பு மதிப்புகள் குறித்துப் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

























