கோலாலம்பூர்:
மலேசியாவில் வாடகை வீடு தொடர்பில் மோசடிகள் அதிகரித்துள்ளதாகவும், இந்த மோசடிகள் திட்டமிட்ட முறையில் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தி அரங்கேற்றப்படுவதக்கவும் மத்தியக் காவல்துறை வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCID) இயக்குநர் ருஸ்டி முகமது இசா தெரிவித்துள்ளார்.
இந்த மோசடி தொடர்பில் 2023-இல் வெறும் 184 புகார்கள் இருந்த நிலையில், 2025-ஆம் ஆண்டில் 922 ஆக உயர்ந்துள்ளது (இது 400% க்கும் அதிகமான உயர்வு), மேலும் கடந்த ஆண்டில் மட்டும் பொதுமக்கள் சுமார் 2.5 மில்லியன் ரிங்கிட் தொகையை இந்த மோசடிகளில் இழந்துள்ளனர்.
அதேநேரம் 2023 முதல் இதுவரை இந்த மோசடி தொடர்பாக 245 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.
இந்த மோசடிக்கும்பல், சமூக ஊடகங்களில் (Facebook, WhatsApp, Telegram) மிகவும் அழகான வீடுகளை மிகக் குறைந்த வாடகைக்கு விடுவதாகப் போலி விளம்பரங்களை வெளியிடுவார்கள். அவர்கள் தங்களை அங்கீகரிக்கப்பட்ட சொத்து முகவர்கள் (Property Agents) அல்லது வீட்டு உரிமையாளர்கள் போலத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வார்கள். இதற்காகப் பிறரது அடையாள அட்டைகளைத் திருடிப் பயன்படுத்துகின்றனர்.
பின்னர் “வீட்டிற்கு அதிக டிமாண்ட் உள்ளது, உடனே முன்பணம் (Deposit) செலுத்தினால் மட்டுமே வீட்டை உறுதி செய்ய முடியும்” என்று கூறி வாடகைக்கு வீடு தேடுபவர்களை பதற்றமடையச் செய்வார்கள்.
ஆனால் பல்வேறு காரணங்களைக் கூறி வீட்டை நேரில் பார்க்கவோ அல்லது உரிமையாளரைச் சந்திக்கவோ அனுமதிக்க மாட்டார்கள்.
எனவே வாடைக்கு வீடு தேடுபவர்கள் இவ்வாறான மோசடிக்குழுக்களின் செயற்பாடுகளை நம்பிவிடக்கூடாது என்றும், வீட்டை நேரில் பார்வையிடாமல் அல்லது சாவியைப் பெறாமல் எந்தவொரு முன்பணத்தையும் (Booking fee/Deposit) செலுத்த வேண்டாம் என்றும் அவர் சொன்னார்.
இது தவிர சொத்து முகவர்களிடம் REN/REA அடையாள அட்டை உள்ளதா எனப் பார்க்கவும். அவர்களின் விபரங்களை LPPEH இணையதளத்தில் சரிபார்க்கலாம். அத்தோடு எப்போதும் நிறுவனத்தின் (Agency) அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்கிற்கு மட்டுமே பணம் செலுத்தவும்; தனிநபரின் வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்புவதைத் தவிர்க்கவும்.
மேலும் நீங்கள் பணம் அனுப்பும் வங்கிக் கணக்கு அல்லது தொலைபேசி எண் ஏற்கனவே மோசடிப் புகாரில் சிக்கியுள்ளதா என்பதை Semak Mule தளத்தில் சரிபார்க்குமாறும் அவர் சொன்னார்.



















