ஜோகூர் பாரு:
ஜோகூர் பாரு, டங்கா பே (Danga Bay) பகுதியில் உள்ள பட்ஜெட் ஹோட்டல்களைத் தங்குமிடமாகவும், போதைப்பொருள் தயாரிக்கும் மினி ஆய்வகமாகவும் பயன்படுத்தி வந்த கும்பலைச் சேர்ந்த இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 1.08 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி 16-ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் ஜோகூர் பாரு தெற்கு மாவட்ட போலீசார் நடத்திய சோதனையில் 35 மற்றும் 37 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஆரம்பத்தில் அவர்களின் அறையிலிருந்து மெத்தாம்பேட்டமைன், கெட்டமைன் மற்றும் யாபா (Yaba) மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. எனினும், அதே ஹோட்டலில் இருந்த மற்றொரு அறையைச் சோதனையிட்டபோது, அங்கு 7.78 கிலோ கிராம் எக்ஸ்டஸி (Ecstasy) போதைப்பொருள் மற்றும் அதனைத் தயாரிப்பதற்கான உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதைப்பொருட்கள் சுமார் 80,184 பயனாளர்களுக்கு விநியோகிக்கும் அளவிற்குப் போதுமானது என ஜோகூர் பாரு தெற்கு மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ரவூப் செலாமட் தெரிவித்தார்.
போலீசாரின் பிடியில் சிக்காமல் இருக்க, இந்தக் கும்பல் கடந்த இரண்டு மாதங்களாக அடிக்கடி பட்ஜெட் ஹோட்டல்களை மாற்றிக்கொண்டே இருந்துள்ளது.
மேலும் போதைப்பொருட்களை மொத்தமாக வாங்கி, அதனைச் சிறு பாக்கெட்டுகளாக மாற்றி, தலா 250 ரிங்கிட் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவருக்கும் ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான குற்றப் பின்னணிகள் உள்ளன. மேலும், அவர்களின் சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மீது 1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B-இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், அவர்களிடம் இருந்த 80,000 ரிங்கிட் மதிப்பிலான கார் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.



















