கோலா காங்சார் அருகே கோர விபத்து: வேன் தீப்பிடித்து எரிந்ததில் வாலிபர் உடல் கருகி பலி

ஈப்போ:

பேராக், கோலா காங்சார் அருகே உள்ள மானோங் பகுதியில் இன்று நிகழ்ந்த நான்கு வாகன மோதலில், வேன் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 32 வயதுடைய உள்ளூர் ஆடவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று பிற்பகல் 3:16 மணியளவில், மானோங், கம்போங் பத்து 40 லெம்பூர் (Kampung Batu 40 Lempur) பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு (JBPM) தகவல் கிடைத்தது. நிசான் வேனெட் (Nissan Vanette) ரக வேன், ஒரு டன் எடையுள்ள ஹினோ லோரி, ஹோண்டா சிவிக் கார் மற்றும் டொயோட்டா விஷ் எம்பிவி ஆகிய நான்கு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தின் தாக்கத்தால் நிசான் வேன் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. வேனுக்குள் சிக்கிக்கொண்ட 32 வயது மதிக்கத்தக்க ஆடவர், தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மரணத்தை சுகாதார அமைச்சக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

வேனில் பயணம் செய்த 16 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்கள் காயமடைந்தனர். அவர்களைத் தவிர, லோரி ஓட்டுநரும் காயங்களுக்குள்ளானார்.

பொதுமக்கள் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற இரண்டு கார்களில் இருந்த ஐந்து பேர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர்.

கோலா கங்சார் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். பலியானவரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மாலை 5:55 மணியளவில் மீட்பு நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவு பெற்றதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஷாஸ்லியன் முகமட் ஹனஃபியா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here