கோலாலம்பூர்:
ஜோகூர் பாரு – சிங்கப்பூர் விரைவு போக்குவரத்து அமைப்பு (RTS Link) திட்டத்தின் கீழ், புக்கிட் சாகார் (Bukit Chagar) ஒருங்கிணைந்த குடிநுழைவு மற்றும் சுங்கச் சோதனை வளாகத்தில் (ICQ) 100 இ-கேட் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய பயணம் மிகவும் வேகமாகவும், நெரிசல் இல்லாமலும் அமையும்.
‘Co-located ICQ’ என்ற மாடலின் கீழ், பயணிகள் மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை சோதனைகளையும் புறப்படும் இடத்திலேயே (புக்கிட் சாகார் அல்லது உட்லண்ட்ஸ் நார்த்) ஒரே வளாகத்தில் முடித்துக் கொள்ளலாம்.
100 இ-கேட் பாதைகள் தவிர, இந்த வளாகத்தில் 10 பாதுகாப்பு சோதனை பாதைகள் (Body checks), 18 பேக்கேஜ் ஸ்கேனர்கள் நிறுவப்பட்டுள்ளன, அதேநேரம் பைகள் ஏதுமின்றி பயணிப்போருக்கு என தனிப்பாதைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் QR-code மூலம் பாஸ்போர்ட் சோதனை செய்யும் வசதியும் இதில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது மனித வளத் தேவையைக் குறைத்து, பயணத்தை விரைவுபடுத்தும் என்று, MRT Corp தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ முகமட் ஜரிப் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
தொடக்கத்தில் ஒரு நாளைக்கு 40,000 பயணிகள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை 1,40,000-ஆக உயரும். இது ஜோகூர் பாலம் (Causeway) நெரிசலில் சுமார் 30 முதல் 40 சதவீதத்தைக் குறைக்கும் என்றார் அவர்.
இந்த RTS ரயில் சேவை, புக்கிட் சாகார் முதல் சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த் வரையிலான 4 கி.மீ தூரத்தை இந்த ரயில் வெறும் 5 நிமிடங்களில் கடந்துவிடும் என்றும், RTS ரயில் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடைந்து, 2026-ஆம் ஆண்டின் இறுதியில் அதிகாரப்பூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.





















