பட்டர்வொர்த், பிப்ரவரி 5:
ஸ்ரீ முர்னி அடுக்குமாடிக் குடியிருப்பில் 41 வயது பெண் கொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்த அதிரடித் தகவல்களைப் பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிஸி இஸ்மாயில் வெளியிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 40 மற்றும் 45 வயதுடைய இருவர்களில், ஒருவருக்கு நடத்தப்பட்ட சிறுநீர் சோதனையில் அவர் ‘கெட்டமைன்’ (Ketamine) எனும் போதைப்பொருளைப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று மதியம் 1.40 மணியளவில் போலீசாருக்குத் தகவல் கிடைத்த 3 மணி நேரத்திற்குள்ளாகவே, புக்கிட் மெர்தாஜாம் மற்றும் குபாங் செமாங் ஆகிய இடங்களில் வைத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக இன்று அதிகாலை ஒரு மியன்மார் நாட்டுப் பிரஜையும் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு உதவும் வகையில் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
பிடிபட்ட சந்தேக நபர்கள் மூவரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் (Remand) வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வழக்கு சட்டப்பிரிவு 302-ன் (கொலை) கீழ் விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் குறைந்தது 12 பிரம்படிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
கொல்லப்பட்ட பெண் தனது படுக்கையறையில் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் கண்டெடுக்கப்பட்டார். அவர் பின்னால் இருந்து தாக்கப்பட்டிருக்கலாம் என்றும், போராடியதற்கான அடையாளங்கள் இல்லாததால் அவருக்குத் தெரிந்த நபர்களே இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றும் தடயவியல் நிபுணர் டத்தோ டாக்டர் ஜஹாரி நூர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



















