கோலாலம்பூர்:
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், கோலாலம்பூர் சோகோ (SOGO) வணிக வளாகத்திற்கு முன்பாக நடைபெறவிருந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
கோலாலம்பூர் மாவட்ட போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் இது குறித்து கூறுகையில், திரட்டப்பட்ட உளவுத் தகவல்களின் அடிப்படையில் இந்தப் பேரணி பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
Gerakan Anti Rumah Anutan Haram (Garah) என்ற அமைப்பு, இன்று சனிக்கிழமை இரவு 8 மணிக்கு அமைதியான முறையில் கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தது. இது தொடர்பான அறிவிப்புக் கடிதத்தை கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி அந்த அமைப்பு போலீசாரிடம் சமர்ப்பித்திருந்தது.
போலீசார் நடத்திய கள ஆய்வின் போது, பேரணி நடைபெறவிருந்த இடத்தைச் சுற்றியுள்ள வணிக வளாகங்களின் உரிமையாளர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
பொது நலன் மற்றும் சட்ட ஒழுங்கைப் பராமரிக்கும் நோக்கில் இந்த அனுமதி மறுப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பேரணி நடத்த முயல்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





















