புதுடெல்லி, பிப்ரவரி 7, 2026:
இந்தியாவில் இயக்கப்படும் விமானங்களில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புச் சோதனைகளில், பாதிக்கும் மேற்பட்ட விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல், கடந்த 2025 ஜனவரி முதல் 2026 பிப்ரவரி 3-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட்டார்.
அவரது அறிக்கையின்படி, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட விமானங்கள் 754, அவற்றில் கோளாறு கண்டறியப்பட்டவை 377 (சுமார் 50%) என்று கூறப்படுகிறது.
தனியார்மயமாக்கப்பட்ட பிறகு பெரும் மாற்றங்களைச் சந்தித்து வரும் ஏர் இந்தியா (Air India) குழுமத்தின் விமானங்களிலேயே அதிகப்படியான தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் 267 விமானங்களில் ஆய்வு நடத்தப்பட்டதில், 191 விமானங்களில் (சுமார் 72%) கோளாறுகள் இருந்தன. இதில் 54 விமானங்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவை.
இந்நிலையில் மற்ற விமான நிறுவனங்களில் இண்டிகோ (IndiGo) சோதனையிடப்பட்ட விமானங்கள் 405 அதில் கோளாறு கண்டறியப்பட்டவை 148, ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) சோதனையிடப்பட்ட விமானங்கள் 43 அதில் கோளாறு கண்டறியப்பட்டவை 16, ஆகாசா ஏர் (Akasa Air) சோதனையிடப்பட்ட விமானங்கள் 32 அதில் கோளாறு கண்டறியப்பட்டவை 14 என்பது குறிப்பிடத்தக்கது.





















