சட்டவிரோதக் குடியேற்றம்: 9 வெளிநாட்டினருக்கு சிறை மற்றும் அபராதம் – பாசிர் மாஸ் நீதிமன்றம் தீர்ப்பு!

பாசிர் மாஸ், பிப்ரவரி 8:

முறையான பயண ஆவணங்களின்றி மலேசியாவிற்குள் நுழைந்தது மற்றும் விசா காலாவதியான பிறகும் தங்கியிருந்தது உள்ளிட்ட குடிவரவு விதிமீறல் வழக்குகளில் 9 வெளிநாட்டினருக்கு இன்று தண்டனை வழங்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் மியன்மார், கம்போடியா, தாய்லாந்து, பாகிஸ்தான் மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 7 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் அடங்குவர்.

கடந்த ஜனவரி 27-ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்களாக பாசிர் மாஸ், தானா மேரா, தும்பாட் மற்றும் கோத்தா பாரு ஆகிய நான்கு மாவட்டங்களில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் இவர்கள் பிடிபட்டனர்.

செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சுல்கிப்ளிதைத் தொடர்ந்து, ஒவ்வொருவருக்கும் RM1,000 முதல் RM10,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது. அத்தோடு ஒரு மாதம் முதல் நான்கு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இவர்கள் மீது 1959/63 குடிவரவுச் சட்டத்தின் கீழ் மூன்று முக்கிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது: பிரிவு 6(1)(c) இன் கீழ் முறையான ஆவணங்களின்றி மலேசியாவிற்குள் நுழைதல், பிரிவு 15(1)(c) இன் கீழ் அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டியும் தங்கியிருத்தல் (Overstaying), ஒழுங்குமுறை 39(b) இன் கீழ் சமூக வருகைக்கான அனுமதிச் சீட்டை (Pass) தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

தங்களுக்குத் தற்காப்பு வழக்கறிஞர்கள் இல்லாத நிலையில், இந்த ஒன்பது பேரும் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் மூலம் தங்களுக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு முறையிட்டனர். இருப்பினும், சட்டவிதிகளின்படி அவர்களுக்கு அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here