கோலாலம்பூர், பிப்ரவரி 16, 2026:
சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு, குறிப்பிட்ட இரு வகை பட்டாசுகளைத் தவிர மற்ற அனைத்து வெடிபொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் மாநகர காவல் துறை தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் தெரிவித்துள்ளார்.
‘பாப்-பாப்’ (Pop-Pop) மற்றும் ‘ஹேப்பி பூம்’ (Happy Boom) ஆகிய இரு வகைகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
மேலும் இந்த இரு வகை பட்டாசுகளை விற்பனை செய்பவர்கள், அந்தந்த மாவட்டக் காவல் தலைமையகத்திடம் முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
சட்டவிரோதமாக மற்ற பட்டாசுகளை வைத்திருப்பவர்கள் அல்லது விற்பனை செய்பவர்கள் மீது 1957-ஆம் ஆண்டு வெடிப்பொருள் சட்டத்தின் (Explosives Act) கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் RM10,000 வரை அபராதமும் விதிக்கப்படும், அல்லது இவை இரண்டுமே விதிக்கப்படலாம்.
அத்தோடு நள்ளிரவு 12:00 மணிக்கு மேல் பட்டாசுகள் அல்லது வானவேடிக்கை பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. இது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயலாகக் கருதப்படும்.
நள்ளிரவுக்கு மேல் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தால், 1955-ஆம் ஆண்டு சிறு குற்றங்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயும் என்றும் , பண்டிகைக் காலத்தில் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், மக்கள் நலனை முன்னிறுத்திச் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும் காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுமக்கள் விதிகளுக்கு உட்பட்டுப் பாதுகாப்பான முறையில் பண்டிகையைக் கொண்டாடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.




















