புத்ராஜெயா:
சில அரசாங்க ஏஜென்சிகளை ஒன்றிணைக்கும் பரிந்துரை அமைச்சரவைக் கூட்டத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படும். இதன்வழி ஒன்றுக்கொன்று ஒரே மாதிரியான செயல்பாடுகளைக் கொண்டிருப்பது தவிர்க்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இதன் தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படுவதற்கு முன்னதாக இவ்விவகாரம் அமைச்சரவையின் பார்வைக்கு முதலில் கொண்டு செல்லப்பட வேண்டியது அவசியமாகிறது என்று நிதி அமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.

சில அரசாங்க ஏஜென்சிகளை ஒருங்கிணைக்கும் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு கருவூலத்தின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ அஸ்ரி ஹமிடோனைப் பணித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதனை அரசாங்கத்தின் தலைமைச் செயலாளரிடம் சமர்ப்பிக்கும்படியும் கேட்டுக் கொண்டதாகச் சொன்னார்.
அமைச்சரவையில் இந்தப் பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது குறித்து தம்முடைய முடிவு இருக்கும் என்று நிதி அமைச்சில் நடைபெற்ற மாதாந்திரக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய அன்வார் தெரிவித்தார்.

மத்திய அரசாங்கத்தின் துணை அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கு செயலகம் ஒன்று கடந்த ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி அமைக்கப்பட்டது. இதன் மூலம் செயல்திட்டங்களை முறைப்படுத்தி நிதியையும் சேமிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
ஒவ்வோர் ஏஜென்சியின் கீழ் எந்தவொரு நிறுவனமும் உயர்மட்ட அனுமதி இன்றி அமைக்கப்படக்கூடாது. இந்த நிறுவனங்கள் மிகப்பெரிய இழப்பை எதிர்நோக்கியுள்ளன. இதனைத் தடுக்கவே இந்த முறை அமல்படுத்தப்படுகிறது என்று அன்வார் மேலும் குறிப்பிட்டார்.























