சிகரெட் கடத்தல் முறியடிப்பு: 1.78 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது!

ஷா ஆலம், பிப்ரவரி 24, 2026:

லேசியாவின் முதலாம் மண்டல கடல்சார் போலீசார் நடத்திய ‘ஓப் தாரிங் லண்டாய்’ (Op Taring Landai) அதிரடி நடவடிக்கையின் மூலம், வரி செலுத்தப்படாத 1,782,000 ரிங்கிட் மதிப்பிலான சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடல்சார் போலீஸ் கமாண்டர் ஏசிபி ஜாஃப்ரி பிதின் விடுத்துள்ள தகவலின்படி, நேற்று அதிகாலை இரண்டு வெவ்வேறு இடங்களில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன:

தெற்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலையில் (SKVE) உள்ள சௌஜானா புத்ரா டோல் பிளாசா அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் சென்ற வெள்ளை நிற வேன் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதனை ஓட்டிச் சென்ற 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.

புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலையின் (NKVE) கி.மீ 5.2-இல் புக்கிட் ராஜா டோல் பிளாசா நோக்கிச் சென்ற மற்றொரு வேனை போலீசார் மறித்தனர். அதன் ஓட்டுநரான 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சோதனை செய்யப்பட்ட இரண்டு வாகனங்களிலும் பல்வேறு வகையான வரி செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. கடத்தலில் ஈடுபட்ட இருவரிடமும் அந்தப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைக்காக கோலா லங்காட் மற்றும் ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைமையகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் 1967-ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தின் பிரிவு 135(1)(d)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here