ஜார்ஜ்டவுன், பிப்ரவரி 25, 2026:
பினாங்கு, குளுகோர் (Gelugor) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கீழே 13 வயது சிறுமி ஒருவர் இன்று காலை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை 9.20 மணியளவில் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் சிறுமி ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பொதுமக்கள் கண்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர் என்று,
தீமோர் லாவுட் (Timur Laut) மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ரோஸாக் முஹமட் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த சிறுமிக்கு 13 வயது என்றும், அவர் பள்ளிச் சீருடை அணிந்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். அவருக்கு அருகில் கருப்பு நிறப் பை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.
அந்த மாணவி அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்திலிருந்து கீழே விழுந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் நம்பப்படுகிறது. சம்பவ இடத்தில் சந்தேகத்திற்குரிய எவ்வித குற்றச் செயல்களுக்கான தடயங்களும் கண்டறியப்படவில்லை.
சிறுமியின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காகப் பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





















