ஜின்ஜாங்கில் 13 ATM இயந்திரங்கள் உடைப்பு: 67 வயது முதியவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

கோலாலம்பூர், பிப்ரவரி 26, 2026:

கடந்த வாரம் ஜின்ஜாங் (Jinjang) பகுதியில் உள்ள மூன்று வங்கிகளில் 13 ஏடிஎம் (ATM) இயந்திரத் திரைகளை உடைத்துச் சேதப்படுத்தியதாகக் கூறப்படும் 67 வயது முதியவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

லியோங் குயென் (Leong Kuen) என்ற அந்த நபர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலான ஒரு வீடியோவில், நபர் ஒருவர் கல்லால் ஏடிஎம் இயந்திரங்களை உடைக்கும் காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. இது குறித்து செந்தூல் மாவட்டப் போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் பிப்ரவரி 18 அன்று லியோங் கைது செய்யப்பட்டார்.

கடந்த பிப்ரவரி 16 காலை 8 மணி முதல் பிப்ரவரி 17 இரவு 9.44 மணி வரை, ஜின்ஜாங் உத்தாரா மற்றும் செலாத்தான் பகுதிகளில் உள்ள Public Bank, Maybank மற்றும் RHB Bank கிளைகளில் இந்தச் சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன.

லியோங் ஒரு கல்லைப் பயன்படுத்தி 13 ஏடிஎம் திரைகளை உடைத்ததில் Maybank-க்கு RM45,183.20 மற்றும் RHB Bank- க்கு RM24,257.76 இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் Maybank ஜின்ஜாங் செலாத்தான் கிளையில் உள்ள பண வைப்பு இயந்திரத்தின் (CDM) பேனலைத் தாக்கி சேதப்படுத்தியதில் RM800 இழப்பு ஏற்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 427-இன் கீழ் (சேதம் விளைவித்தல்) இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

நான்கு வெவ்வேறு மஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் அவருக்கு மொத்தம் RM14,300 பிணைத் தொகை மற்றும் ஒரு நபர் ஜாமீனுடன் பிணை வழங்கியுள்ளன. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 7 மற்றும் 20 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here