கோலாலம்பூர், பிப்ரவரி 26, 2026:
மலேசியா முழுவதும் சட்டவிரோத மின்னணுக் கழிவுகள் (e-waste) இறக்குமதியாவதைத் தடுக்க, ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) மற்றும் எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை (MCBA) ஆகியவை இணைந்து அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.
புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற தேசிய நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு, MACC தலைமை ஆணையர் டத்தோ ஸ்ரீ அசாம் பாக்கி செய்தியாளர்களிடம் பேசும்போது, நாடு முழுவதும் சுமார் 800-க்கும் மேற்பட்ட கன்டெய்னர்கள் சட்டவிரோத மின்னணுக் கழிவுகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டு விசாரணையில் உள்ளதாகவும், இந்த விசாரணையில் சுற்றுச்சூழல் துறை (DoE), MCBA மற்றும் சுங்கத்துறை ஆகியவை இணைந்து செயல்படுகின்றன என்றும் சொன்னார்.
துறைமுகங்களில் புகார்கள் வந்தவுடன் MCBA, சுங்கத்துறை மற்றும் போலீசார் உடனடியாகக் களத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில் சமீபத்திய சோதனையில் மட்டும் 58 கன்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக MCBA போர்ட் கிள்ளான் கமாண்டர் டத்தோ நிக் எசானி முகமட் பைசல் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் துறையின் உறுதிப்படுத்தல் கிடைக்கும் வரை சந்தேகத்திற்குரிய கன்டெய்னர்கள் அனைத்தும் தடுத்து வைக்கப்படும் என்றும். விதிமுறைகளை மீறி கொண்டு வரப்படும் கன்டெய்னர்கள் அனைத்தும் மலேசியாவிற்குள் அனுமதிக்கப்படாமல், வந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படும் என்றும் அவர் சொன்னார்.
























