பழைய பகையை மறப்போம்!” – நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு அம்னோ நிபந்தனையற்ற அழைப்பு; ஜாஹிட் ஹமிடி அதிரடி!

கோலாலம்பூர், மார்ச் 6:

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு, அம்னோ (UMNO) கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் கட்சியில் இணையலாம் என அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

கட்சியின் பழைய பலத்தை மீட்டெடுக்கவும், உள்நாட்டு ஒற்றுமையை வலுப்படுத்தவும் இந்த அதிரடி முடிவை அவர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “கடந்த கால கசப்புணர்வுகள் மற்றும் கருத்து வேறுபாடுகளைத் தூக்கியெறிந்துவிட்டு, புதிய அத்தியாயத்தைத் தொடங்க இதுவே சரியான தருணம். ரமலான் மாதத்தின் புனிதத்தை முன்னிட்டு இந்த ‘மன்னிப்பு மற்றும் மறுஇணைவு’ கொள்கையை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்,” எனத் தெரிவித்தார்.

ஒருங்கிணைஇந்த மறுஇணைவு நடவடிக்கைகளை டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் தலைமையிலான ‘ரூமா பங்சா’ (Rumah Bangsa) குழு முன்னெடுக்கும். கட்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, முன்னாள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை மீண்டும் உள்வாங்கும் பணிகளை இக்குழு ஒருங்கிணைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் சூழலில் அம்னோவின் செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்தவும், அடித்தட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறவும் இந்த முடிவு ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பிரிந்து கிடக்கும் சக்திகளை ஒன்றிணைப்பதன் மூலம், வரும் காலங்களில் அம்னோ ஒரு பலமிக்க அரசியல் சக்தியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here