சிப்பாங் | மார்ச் 09, 2026 :
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்பட்ட மூன்று வெவ்வேறு சோதனைகளில், சுமார் 3.26 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டுப் பணத்தைச் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
முதலில் வயிற்றுக்குள் 101 கோகோயின் காப்ஸ்யூல்கள் (ஜனவரி 29) வைத்திருந்த 50 வயது மதிக்கத்தக்க தான்சானியா நாட்டு நபர் Terminal 1-ல் கைது செய்யப்பட்டார். அவர் ‘பாடி பேக்கிங்’ (Body packing) முறையில் போதைப்பொருளை வயிற்றுக்குள் மறைத்து கடத்தி வந்துள்ளார்.
உடல் ஸ்கேன் பரிசோதனைக்குப் பிறகு, அவரது வயிற்றிலிருந்து 101 கோகோயின் காப்ஸ்யூல்கள் (எடை: 1.629 கிலோ) எடுக்கப்பட்டன. இதன் மதிப்பு சுமார் 733,140 ரிங்கிட் ஆகும்.
இவர் மீது 1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B(1)(a)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இன்னொரு வழக்கில் பிப்ரவரி 6 ஆம் தேதி சட்டவிரோத வெளிநாட்டுப் பணக்கடத்தல் குற்றச்சாட்டில் வங்காளதேச பயணி ஒருவர் Terminal 1-ல் பிடிபட்டார்.
தனது ஆடைகளின் உட்புறத்தில் சவுதி ரியால், யூரோ மற்றும் பிரிட்டிஷ் பவுண்டுகளை மறைத்து வைத்து, அதிகாரிகளிடம் அறிவிக்காமல் (Undeclared) கொண்டு வந்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பு சுமார் 2.41 மில்லியன் ரிங்கிட் ஆகும்.
10,000 அமெரிக்க டாலருக்கு இணையான அல்லது அதற்கு மேலான ரொக்கப் பணத்தைக் கொண்டு வரும் பயணிகள், சுங்கப் படிவம் 7-ல் (Customs Form 7) அதனைத் தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
மற்றும் பிப்ரவரி 10 ஆம் தேதி இந்தோனேசிய பயணி ஒருவர் பணத்தை வெளியே கடத்த முயற்சி செய்த குற்றச்சாட்டில் Terminal 2-ல் கைது செய்யப்பட்டார். மலேசியாவிலிருந்து வெளியேறும்போது, மலேசிய ரிங்கிட் பணத்தை முறையான அறிவிப்பு மற்றும் மலேசிய மத்திய வங்கியின் (BNM) அனுமதி இன்றி கொண்டு செல்ல முயன்றுள்ளார். அவரிடமிருந்து 120,100 ரிங்கிட் பறிமுதல் செய்யப்பட்டது.
பணக்கடத்தல் தொடர்பான வழக்குகள் கறுப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (AMLATFPUAA) கீழ் விசாரிக்கப்படுகின்றன. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 மில்லியன் ரிங்கிட் வரை அபராதம் அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று KLIA சுங்கத்துறை இயக்குநர் சுல்கிப்லி முகமட் தெரிவித்தார்.























