ஜோகூரில் ஹோட்டலில் வெளிநாட்டுப் பெண் கொலை; 19 வயது இளைஞர் 24 மணிநேரத்தில் கைது!

ஜோகூர் பாரு | மார்ச் 12, 2026 :

ஜோகூர் பாரு, மாஜு ஜெயா (Maju Jaya) பகுதியில் உள்ள ஒரு மலிவு விலை ஹோட்டலில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 19 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்றம் நடந்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே, நேற்று புதன்கிழமை (மார்ச் 11) இரவு 8 மணியளவில் ஜோகூர் பாருவில் உள்ள ஒரு கூட்டுரிமை குடியிருப்பில் (Condominium) சந்தேக நபர் பிடிபட்டார் என்று, ஜோகூர் மாநிலக் காவல்துறையின் துணை ஆணையர் ஹூ சுவான் ஹுவாட் கூறினார்.

கைது செய்யப்பட்ட 19 வயது இளைஞரும் ஒரு வெளிநாட்டவர் ஆவார். இவருக்கு முன்னதாக எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை. போதைப்பொருள் பரிசோதனையில் இவர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து ஒரு கண்காணிப்பு கேமரா பதிவு இயந்திரம் (CCTV Recording Machine), இரண்டு கைப்பேசிகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.

பாலியல் தொழிலாளி என்று நம்பப்படும் அந்த வெளிநாட்டுப் பெண், நேற்று (மார்ச் 11) ஹோட்டல் அறை ஒன்றில் உடலில் பல கத்திக்குத்துக் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் கீழ் கொலை வழக்காக விசாரிக்கப்படுகிறது. சந்தேக நபர் வரும் மார்ச் 18-ஆம் தேதி வரை 7 நாட்கள் விசாரணைக் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here