துவாரான் | மார்ச் 12, 2026:
துவாரான் பகுதியில் உள்ள தெங்கிலான் (Tenghilan) வாராந்திரச் சந்தையில், பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் உறுப்புகளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்த உள்ளூர் நபர் ஒருவரைச் சபா வனவிலங்குத் துறை கைது செய்துள்ளது.
இன்று காலை 8:50 மணியளவில் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், துறையின் விரைவு அதிரடிப் படையினர் (RRT) இந்தச் சோதனையை நடத்தியதாகவும், இச்சம்பவம் தொடர்பாக 30 வயது மதிக்கத்தக்க உள்ளூர் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சபா வனவிலங்குத் துறை இயக்குநர் முகமட் சோஃபியான் அபு பக்கார் தெரிவித்தார்.
சூரிய கரடி (Sun Bear): 2 நகங்கள், 1 பாதம் மற்றும் 1 பல், அழுங்கு (Pangolin): 1 செதில், கேளையாடு (Barking Deer): 1 கொம்பு, மற்றும் முள்ளம்பன்றி (Porcupine): 16 முட்கள் என்பவற்றை அவர் தனது கடையில் விற்பனைக்கு வைத்திருந்தார்.
இந்த விவகாரம் 1997-ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் (WCE 1997) கீழ் விசாரிக்கப்படுகிறது.
சூரிய கரடி மற்றும் அழுங்கு ஆகியவை ‘முழுமையாகப் பாதுகாக்கப்பட்ட’ (Totally Protected) இனங்களாகும். இவற்றையோ அல்லது அவற்றின் உறுப்புகளையோ வைத்திருக்கவோ, விற்கவோ யாருக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 50,000 ரிங்கிட் முதல் 250,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும், 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
வனவிலங்கு பாகங்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உடனடியாகத் துறையிடம் புகார் அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
























