மலாக்கா | மார்ச் 15, 2026:
மலாக்கா, பெக்கான் தங்கா பத்து (Pekan Tangga Batu) மசூதிக்கு முன்பாக இன்று அதிகாலை 4:00 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களிடையே ஏற்பட்ட பயங்கர மோதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக ஏற்பட்ட தவறான புரிதலே (Misunderstanding) இந்த மோதலுக்குக் காரணம் என நம்பப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒருவரை ஒருவர் ஹெல்மெட்டுகளால் சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. 1 நிமிடம் 21 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில், சிலர் சாலையில் விழுந்து கிடப்பதையும், அவர்களைக் கும்பலாகச் சேர்ந்து ஹெல்மெட்டுகளால் தாக்குவதையும் காண முடிகிறது.
“ஒரு மக்கள் பிரதிநிதியாகவும், ஒரு தாயாகவும் இந்தச் சம்பவம் எனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. இது போன்ற வன்முறைகள் உள்ளூர் சமூகத்தின் அமைதியையும் பாதுகாப்பையும் பாதிக்கும். குறிப்பாக இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள்களில் வெளியே செல்லும் பிள்ளைகளைக் கண்காணிப்பதில் பெற்றோர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும்” என்று, பந்தாய் குண்டூர் (Pantai Kundor) சட்டமன்ற உறுப்பினர் துமினா காடி கூறினார்.
மலாக்கா மாநிலக் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையைத் துரிதமாக வெளியிடக் காவல்துறை திட்டமிட்டுள்ளது.



















