கோலாலம்பூர் (மார்ச் 20, 2026):
பகாங் மாநிலத்தில் குற்றத்தடுப்புச் சட்டத்தின் (POCA) கீழ் தேடப்பட்டு வந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை, புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு அதிவேக நெடுஞ்சாலையில் (NKVE) நிகழ்ந்த சினிமா பாணி துரத்தலுக்குப் பிறகு பெட்டாலிங் ஜெயா போலீசார் கைது செய்தனர்.
கடந்த புதன்கிழமை மதியம் 2.10 மணியளவில், கிள்ளான் நோக்கிச் செல்லும் பாதையில் நீல நிற ‘பெரோடுவா மைவி’ (Perodua Myvi) காரைச் செலுத்தி வந்த அந்த இளைஞர், போலீசாரின் சோதனையிலிருந்து தப்பிக்க முயன்றார்.
தப்பிக்கும் முயற்சியில் அவர் அதிவேகமாகவும், ஆபத்தான முறையிலும் காரைச் செலுத்தி அங்கிருந்த பல வாகனங்கள் மீது மோதினார். இறுதியில் போலீஸ் ரோந்து வாகனம் (MPV) அவரது காரை மறித்து நிறுத்தியது.
விசாரணையில் அந்த நபருக்கு ஏற்கனவே 7 குற்றப் பதிவுகள் இருப்பது தெரியவந்தது. மேலும், பகாங் மாநிலத்தின் கோலா பெராவில் ‘போகா’ சட்டத்தின் பிரிவு 15(4)-ன் கீழ் அவர் தேடப்படும் குற்றவாளி என்பதும் உறுதியானது.
அவர் பயன்படுத்திய காரின் சேஸ் (Chassis) எண்ணைச் சோதித்தபோது, அதுவும் கோலா பெராவிலேயே திருடப்பட்டது என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று, பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் சம்சுதீன் மாமட் கூறினார்.
“சந்தேக நபர் மார்ச் 18 முதல் இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளார். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் (பிரிவு 186) மற்றும் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் (பிரிவு 279) ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை நடைபெறுகிறது. விசாரணை முடிந்ததும் அவர் பெரா மாவட்ட போலீஸ் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்படுவார்.”
இந்தச் சம்பவம் தொடர்பான 38 வினாடி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இது குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும், சாட்சிகள் எவரேனும் இருந்தால் 03-79662222 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தகவல் அளிக்குமாறும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.




















