8 நாட்கள் போராட்டத்திற்குப் பின் சரவாக்கில் காட்டுத்தீ கட்டுக்குள் வந்தது! 300 ஹெக்டேர் நிலப்பரப்பு பாதிப்பு

பிந்துலு | மார்ச் 30, 2026:

சரவாக் மாநிலம், பிந்துலு அருகே உள்ள டாடாவ் (Tatau) பகுதியில் கடந்த எட்டு நாட்களாகப் பற்றி எரிந்து வந்த காட்டுத்தீ தற்போது தீயணைப்பு வீரர்களின் கடும் போராட்டத்திற்குப் பிறகு ஒருவழியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு பெய்த மழையினால் தீயின் வீரியம் பெருமளவு குறைந்துள்ளது. தற்போது சில இடங்களில் மட்டும் லேசான புகைமூட்டம் காணப்படுகிறது என்று, சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக 300 ஹெக்டேர் நிலப்பரப்பில் தீ பரவிய நிலையில், அதில் 226 ஹெக்டேர் பரப்பளவிலான தீ முற்றிலும் அணைக்கப்பட்டுள்ளது.

மூன்று வெவ்வேறு குழுக்கள் பிரிக்கப்பட்டு, தீ மேலும் பரவாமல் தடுக்கத் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாலை 5:30 மணியளவில் இன்றைய தேடுதல் மற்றும் அணைக்கும் பணிகள் நிறைவு பெற்றன.

பிந்துலுவில் நிலைமை சீராகி வரும் வேளையில், முக்காவின் டாரோ (Daro) பகுதியில் உள்ள கம்போங் பெனாசுவில் (Kampung Penasu) காட்டுத்தீயை அணைக்கும் பணி இன்று நான்காவது நாளாகத் நீடிக்கிறது.

சுமார் 75 ஹெக்டேர் பரப்பளவில் தீ பற்றி எரிந்து வருகிறது. இதில் இதுவரை 10 ஹெக்டேர் மட்டுமே அணைக்கப்பட்டுள்ளது.

டாரோ தீயணைப்பு நிலையத் தலைவர் ஹஸ்மான் பக்கார் தலைமையில் 16 வீரர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாகத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் என மொத்தம் 25-க்கும் மேற்பட்டோர் கைகோர்த்துள்ளனர்.

சரவாக் மற்றும் சபாவின் பல பகுதிகளில் தற்போது நிலவி வரும் வறண்ட வானிலை காரணமாக இத்தகைய தீ விபத்துகள் அதிகரித்து வருகின்றன. பொதுமக்கள் திறந்தவெளியில் குப்பைகளை எரிக்க வேண்டாம் என்றும், தீப்பற்றக்கூடிய செயல்களைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here