ஈரான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்: பிரதமர் அன்வார் கடும் கண்டனம்!

கோலாலம்பூர் | மார்ச் 30, 2026

ஈரான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதலை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வன்மையாகக் கண்டித்துள்ளார். அமெரிக்காவின் ஆதரவுடன் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல், சர்வதேச சட்டங்கள் மற்றும் மனிதாபிமானக் கொள்கைகளை மீறும் செயல் என அவர் சாடியுள்ளார்.

அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது சர்வதேச விதிகளுக்கு எதிரானது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் அரசியல், ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த முக்கியத் தலைவர்களுக்கும், அப்பாவிப் பொதுமக்களுக்கும் மலேசியாவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று, பிரதமர் அன்வார் தனது அதிகாரப்பூர்வ முகநூல் (Facebook) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் குறித்துத் தெரிந்துகொள்ள, ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) அவர்களைத் தொடர்பு கொண்டு பேசியதாகப் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

ஈபோரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உறுதிமொழி அளிக்கப்பட்டால், பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக இருப்பதாக அதிபர் பெசெஷ்கியான் மலேசியப் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

காசா மற்றும் லெபனானில் நிகழ்ந்தது போல, முறையான உத்தரவாதம் இல்லாத தற்காலிகப் போர்நிறுத்தங்கள் மீண்டும் வன்முறைக்கே வழிவகுக்கும் என அன்வார் எச்சரித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலையான அமைதி ஏற்பட வேண்டுமானால், அது நீதி மற்றும் பொறுப்புக்கூறல் (Accountability) அடிப்படையில் அமைய வேண்டும் என மலேசியா நம்புகிறது. மலேசியா வழங்கி வரும் தொடர் ஆதரவிற்கும் ஒற்றுமைக்கும் ஈரான் அதிபர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோதல் விரைவில் ஒரு சுமுகமான மற்றும் அமைதியான முடிவுக்கு வர வேண்டும் என அனைவரும் பிரார்த்திப்போம் என்று கூறிப் பிரதமர் தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here