ஏப்ரல் மாதத்திற்கான ‘Budi Diesel’ நிதியுதவி RM300 ஆக உயர்வு! 3.4 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்: நிதி அமைச்சகம் அறிவிப்பு

கோலாலம்பூர் | மார்ச் 31, 2026:

உலகளாவிய எரிபொருள் சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் மாதத்திற்கான புடி மதானி டீசல் (Budi Diesel) நிதியுதவியை 300 ரிங்கிட் ஆக நீட்டிக்க மலேசிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

வழக்கமான நிதியுதவியுடன் வழங்கப்பட்டு வரும் கூடுதல் இடைக்கால உதவியான RM100 இந்த மாதமும் தொடரும். இதன் மூலம் ‘புடி தனிநபர்’ (Budi Individual) மற்றும் ‘புடி விவசாயக் குழுமங்கள்’ (Budi Agri-Commodities) ஆகிய பிரிவுகளில் உள்ள பயனாளிகளுக்கு மொத்தம் 300 ரிங்கிட் நிதியுதவி கிடைக்கும் என்று,
மலேசிய நிதி அமைச்சகம் (MoF) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுமார் 3.4 லட்சம் தகுதியுள்ள நபர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். இதற்காக அரசாங்கம் சுமார் 102 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த ஏப்ரல் மாதத்திற்கான நிதியுதவி வரும் ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் பயனாளிகளின் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், உலகளாவிய எரிபொருள் விலை உயர்வால் மக்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2024 மே மாதம் தொடங்கப்பட்ட இந்த Budi Diesel திட்டம், இதுவரை 1.12 பில்லியன் ரிங்கிட் நிதியுதவியை மக்களுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here