3 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை: முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கு 32 ஆண்டுகள் சிறை மற்றும் 9 பிரம்படி – மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

கோலாலம்பூர் | ஏப்ரல் 2, 2026

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 56 வயதுடைய முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ஏ. ஜான்சன் (A. Johnson) என்பவருக்கு விதிக்கப்பட்ட 32 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 9 பிரம்படிகளை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

ஐந்து குழந்தைகளின் தந்தையான ஜான்சன், கடந்த 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் கோலாலம்பூரில் உள்ள மூன்று வெவ்வேறு குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகளின் மின்தூக்கிகளில் (Lifts) வைத்து இக்கொடூரச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

இந்த கொடுமையில் பாதிக்கப்பட்டவர்கள்11, 14 மற்றும் 16 வயதுடைய மூன்று சிறுமிகளாவர்.

இதில் 14 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை (Rape) செய்ததற்கும், மற்ற இரு சிறுமிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதற்கும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

நீதிபதி டத்தோ அஸ்மி அரிஃபின் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஜான்சனின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.

செஷன்ஸ் நீதிமன்றம் முதலில் இந்தத் தண்டனைகளை ஏககாலத்தில் (Concurrent) அனுபவிக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், உயர் நீதிமன்றம் அதனை மாற்றி, ஒவ்வொரு குற்றத்திற்கும் தனித்தனியாகத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் (Consecutive) என உத்தரவிட்டது. இதனை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

பாலியல் வன்கொடுமைக்கு 12 ஆண்டுகளும், மற்ற இரு தாக்குதல்களுக்குத் தலா 10 ஆண்டுகளும் என மொத்தம் 32 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு சிறுமிகள் பாதிக்கப்பட்டிருப்பதால், தண்டனைகள் தொடர்ச்சியாகவே இருக்க வேண்டும் என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

குற்றவாளி பட்டப்பகலில் கத்தியைக் காட்டி சிறுமிகளை மிரட்டியுள்ளதாகவும், இதனால் அச்சிறுமிகள் வாழ்நாள் முழுவதும் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஜான்சன் நீரிழிவு நோயாளியாக இருப்பதால் அவருக்குப் பிரம்படி வழங்குவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், நன்னடத்தை அடிப்படையில் அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

தற்போது 56 வயதாகும் ஜான்சன், ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்துள்ளார். மீதமுள்ள தண்டனை மற்றும் நன்னடத்தை குறைப்புகளைக் கணக்கிட்டால், அவர் தனது 70-களின் தொடக்கத்தில் சிறையிலிருந்து விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலையான பிறகு அவர் மூன்று ஆண்டுகளுக்குப் போலீஸ் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here