கோலாலம்பூர்:
கடந்த அக்டோபர் மாதம் ஜெட்டாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரபல மலேசிய நகைச்சுவை நடிகர், போதைப்பொருள் வைத்திருந்தது தொடர்பான குற்றச்சாட்டிலன் கீழ் தற்போது சவுதி அரேபியாவில் ஆறு மாத சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார் என்பதை விஸ்மா புத்ரா இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த விசாரணையின் போது நகைச்சுவை நடிகருக்கு தண்டனை வழங்கப்பட்டதாகவும், அவரது சிறைத்தண்டனை இந்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடையும் என்றும், சிறையில் இருக்கும் போது குறித்த நகைச்சுவை நடிகர் நன்நடத்தையை வெளிப்படுத்தினால், அவர் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ரியாத்தில் உள்ள மலேசியத் தூதரகம், கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி மலேசியன் ஒருவர் ஜெட்டாவில் தடுத்து வைக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது.
இருப்பினும், இந்த கடினமான தருணத்தில் அவரின் குடும்பம் மற்றும் தனியுரிமைக்கு மதிப்பளிக்கும் வகையில் அவரின் அடையாளத்தை அது வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



















