கோலாலம்பூர், ஏப்ரல் 12:
மலாக்கா நீரிணைப் பகுதியில் ‘கே.எம் மந்த்ரி’ (KM Mandiri) என்ற மீன்பிடிப் படகில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், மூன்று மீனவர்கள் உயிரிழந்தனர். மேலும், ஐந்து மீனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) அதிகாலையில், வழக்கமான மீன்பிடிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அந்தப் படகில் தீப்பிடித்தது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டனர்.
இந்த விபத்தில் படகில் இருந்த 13 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, தற்போது வட சுமத்ராவின் மேடான் தீவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளும் உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவலளித்த இந்தோனேசிய வட்டார கடற்படைத் தளபத்தியத்தின் பேச்சாளர் வாஹ்யு குர்னியவான் (Wahyu Kurniawan), உயிரிழந்த மீனவர்கள் ஐயான் (Ayan), ஜஹார் (Zahar) மற்றும் புயித்தின் (Puyithin) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட மீனவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்த விரிவான விசாரணைகளை இந்தோனேசிய கடற்படை மேற்கொண்டு வருகிறது. காணாமல் போன ஐவரையும் கண்டறியும் நோக்கில் தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.




















