இ-ஹெய்லிங் சேவை மூலம் போதைப்பொருள் கடத்தல்: RM69,000 மதிப்புள்ள ‘ஷாபு’ பறிமுதல்!

பொந்தியான், ஏப்ரல் 13:

இ-ஹெய்லிங் (e-hailing) வாகனச் சேவையைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்திய நபர் ஒருவரைப் பொந்தியான் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து சுமார் 69,080 ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு (Syabu) போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9:15 மணியளவில், பொந்தியான், கம்போங் பெனெரோக், ஜாலான் குகுப் (Jalan Kukup) பகுதியில் வழக்கமான குற்றத்தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இ-ஹெய்லிங் காரைச் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டது.

அப்போது, அந்தக் காருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,528 கிராம் எடையுள்ள ஷாபு போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக 36 வயதான வேலையில்லாத நபர் ஒருவர் மற்றும் 43 வயதான பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் கடத்துவதற்காக ஒவ்வொரு பயணத்திற்கும் 1,000 ரிங்கிட் ஊதியம் பெறுவதாக அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். கோலாலம்பூரைச் சேர்ந்த நபர் ஒருவரின் உத்தரவின் பேரில், ஜோகூர் பாரு, பெர்லிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிலிருந்து போதைப்பொருளைப் பெற்று, இ-ஹெய்லிங் சேவை மூலம் கடத்தியது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட நபர், கடந்த 2020-ஆம் ஆண்டு சிம்பாங் ரெங்கம் சிறையில் இருந்தபோது, அந்தச் சிண்டிகேட் நபருடன் ஏற்பட்ட அறிமுகத்தின் அடிப்படையில் இந்தச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

சந்தேகத்திற்குரிய நபர் 7 நாட்கள் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே போதைப்பொருள் மற்றும் குற்றப் பின்னணிகள் உள்ளன.

இ-ஹெய்லிங் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு, அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39பி-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் பிரம்படி கிடைக்க வாய்ப்புள்ளது.

இது குறித்துப் பேசிய மாவட்ட காவல் துறைத் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் ஹாஸ்ரத் ஹுசைன் மியான் (Hadzrat Hussien Mion), “தெரியாத நபர்களின் பொருட்களைக் கொண்டு செல்லும் வேலைகளில் ஈடுபடும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கவர்ச்சிகரமான ஊதியத்திற்காக சட்டவிரோத செயல்களில் சிக்கித் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்க வேண்டாம்,” என்று வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here