போர்ட் கிள்ளான், ஏப்ரல் 15:
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பு (MCBA), ‘ஆப்ரேஷன் கிரீன் ஷீல்ட்’ (Op Green Shield) நடவடிக்கையின் கீழ், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 150 மின்னணுக் கழிவுக் (e-waste) கொள்கலன்களை வரும் மே 1-ஆம் தேதிக்குள் அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்ப இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சோதனைகளின் மூலம் இந்த இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக போர்ட் கிள்ளான் MCBA தளபதி டத்தோ நிக் எசானி முகமட் பைசல் (Datuk Nik Ezanee Mohd Faisal) தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இரவு வெஸ்ட்போர்ட்ஸ் (Westports) வந்தடைந்த கப்பலில், முதல் கட்டமாக 15 மின்னணுக் கழிவுக் கொள்கலன்கள் ஏற்றப்பட்டு, நேற்று காலை அவை துறைமுகத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
இந்த வார இறுதிக்குள் மேலும் 40 கொள்கலன்களை வெளியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் புதிதாகக் கண்டறியப்பட்ட 21 கொள்கலன்கள் வரும் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார்.
கடந்த ஜனவரி 26-ஆம் தேதி தொடங்கப்பட்ட ‘ஆப்ரேஷன் கிரீன் ஷீல்ட்’ நடவடிக்கையில், இதுவரை 21 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 456 கொள்கலன்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் 254 கொள்கலன்கள் மின்னணுக் கழிவுகளைக் கொண்டுள்ளன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் போர்ட் கிள்ளானில் மட்டும் இதுவரை 6,200 டன்னுக்கும் அதிகமான மின்னணுக் கழிவுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் முன்னதாகக் கையிருப்பில் இருந்தவை உட்பட மொத்தம் 803 கொள்கலன்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டிய நிலையில் உள்ளன.
இந்த நடவடிக்கையின் திறனை மேலும் அதிகரிக்க, காவல் துறையின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையை (KDNKA) கூட்டுப் பணிக்குழுவில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது துறைமுகப் பகுதிகளுக்கு வெளியே நடக்கும் மின்னணுக் கழிவுச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும் என்று டத்தோ நிக் எசானி தெரிவித்தார்.
சுங்கத் துறை, சுற்றுச்சூழல் துறை, சிரிம் (SIRIM), போர்ட் கிள்ளான் ஆணையம் மற்றும் மாக்கிஸ் (Maqis) ஆகிய துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் மட்டுமே இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. இந்தச் சட்டவிரோத இறக்குமதியை முழுமையாக ஒழிக்க, கப்பல் நிறுவனங்களின் ஒத்துழைப்பும் மிக அவசியமானது என்று அவர் மேலும் கூறினார்.




















