அம்னோவில் கைரி ஜமாலுடின், ஹிஷாமுடின் உட்பட 6,000-க்கும் மேற்பட்டோர் மீண்டும் கட்சியில் சேர்ப்பு!

கோலாலம்பூர்:

மலேசியாவின் பழம்பெரும் கட்சியான அம்னோ (UMNO), தனது உட்கட்சி ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மற்றும் விலகிய முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை மீண்டும் இணைத்துக் கொள்ளும் அதிரடி முடிவை எடுத்துள்ளது.

அம்னோ பொதுச் செயலாளர் அஸ்ரப் வஜ்டி டூசுக்கி (Asyraf Wajdi Dusuki) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கட்சியின் உச்ச மன்றம் எடுத்துள்ள முக்கிய முடிவுகள் வருமாறு: அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவரான கைரி ஜமாலுதீன் கைரி ஜமாலுதீன் (Khairy Jamaluddin) மீண்டும் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் முன்னாள் உதவித் தலைவரான ஹிஷாமுடின் (Hishammuddin Hussein) மீதான நீண்ட கால இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு, அவர் மீண்டும் கட்சிப் பணிகளில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கடந்த 2018-ஆம் ஆண்டு கட்சியை விட்டு விலகி பெர்சத்து (Bersatu) கட்சியில் இணைந்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் சையத் ஹமீட் அல்பாரும் (Syed Hamid Albar) மீண்டும் தாய் கட்சியான அம்னோவில் இணைந்துள்ளார்.

கட்சியின் வலிமையை மீட்டெடுக்க “ருமா பங்சா” (Rumah Bangsa) எனும் விசேட முயற்சியின் கீழ் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பல்வேறு நிலைகளில் இருந்த மொத்தம் 6,252 முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் அம்னோ குடும்பத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகப் பின்னடைவைச் சந்தித்து வந்த அம்னோ, தற்போது அனுபவம் வாய்ந்த தலைவர்களை மீண்டும் அரவணைப்பதன் மூலம், எதிர்வரும் தேர்தல்களில் தனது செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்தத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, இளைஞர்களிடையே செல்வாக்கு மிக்க கைரி ஜமாலுதீன் போன்றவர்களின் வருகை கட்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சியின் இந்தத் திடீர் மாற்றம் மலேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here