ஜோகூர் ஸ்துலாங் லாவூட்டில் அதிரடி சோதனை; இரவு விடுதியில் 37 வெளிநாட்டவர்கள் மற்றும் மேலாளர் கைது!

கோலாலம்பூர்:

ஜோகூர் பாரு, ஸ்துலாங் லாவூட் பகுதியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், 37 சட்டவிரோதக் குடியேறிகள் மற்றும் ஒரு மலேசிய மேலாளர் கைது செய்யப்பட்டனர்.

குறிப்பிட்ட இரவு விடுதியில் சட்டவிரோதக் குடியேறிகள் பணியமர்த்தப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு அடைக்கலம் வழங்கப்படுவதாகவும் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் குடிநுழைவுத் துறை இந்தச் சோதனையை மேற்கொண்டது.

இந்த சோதனை நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, சீனா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிடிபட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 20 முதல் 53 வயதுக்குட்பட்ட பெண்களும் அடங்குவர். இவர்கள் அந்த விடுதியில் விருந்தோம்பல் ஊழியர்களாக (Hostesses) பணியாற்றி வந்ததாக நம்பப்படுகிறது.

சட்டவிரோதக் குடியேறிகளுக்கு வேலை வழங்கிய குற்றத்திற்காக அந்த விடுதியின் மேலாளரான மலேசியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று, ஜோகூர் மாநில குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ முகமட் ருஷ்டி முகமட் தாருஸ் தெரிவித்தார்.

“ஆவணங்களின்றி தங்கியிருப்பது மற்றும் வேலை அனுமதிப்பத்திர விதிகளை மீறியது போன்ற பல்வேறு குடிநுழைவு குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்,” என்று அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட 38 பேரும் மேலதிக விசாரணைக்காக செத்தியா துரோப்பிக்கா (Setia Tropika) குடிநுழைவுத் தடுப்பு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதக் குடியேறிகளைப் பணியமர்த்தும் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் தரும் வணிக நிறுவனங்களுக்கு எதிராகத் தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் துறை எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here