கோலாலம்பூர்:
சம்பூர்ணா பகுதியில் கடலில் மூழ்கிக்கொண்டிருந்த இரு தீவுவாசிகளைத் துணிச்சலாகக் காப்பாற்றிய நடமாடும் மருத்துவப் படகு குழுவினரை (Mobile Clinic Boat Team) மலேசிய சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 22 அன்று, நோய்க்கான (NCD) சிகிச்சையை முடிந்து இரண்டு குடியிருப்பாளர்கள் தங்களது சிறிய படகில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்களது படகு நடுக்கடலில் கவிழ்ந்து மூழ்கியது. அவர்கள் இருவரும் நீச்சல் தெரிந்தவர்களாக இருந்தபோதிலும், நீண்ட நேரம் நீரில் தத்தளித்ததால் தசைப்பிடிப்பு (Muscle cramps) ஏற்பட்டு உயிருக்குப் போராடினர்.
சரியான நேரத்தில் அங்கு வந்த சுகாதார அமைச்சின் நடமாடும் மருத்துவக் குழுவினர், அந்த இருவரையும் காப்பாற்றினர். இந்த மீட்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட நபர்களை அமைச்சர் தனது முகநூல் பதிவில் பாராட்டியுள்ளார்.அவர்கள் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பாகப் படகில் ஏற்றியதுடன், மூழ்கிய அவர்களது படகையும் மீட்டனர்.
மீட்புக் குழுவினரின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: “எங்கள் ஊழியர்களின் துரிதமான நடவடிக்கை மற்றும் அசாதாரணமான தைரியத்தைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். ‘Kami Sedia Membantu’ (நாங்கள் உதவத் தயார்) என்பது வெறும் காகிதத்தில் உள்ள வாசகம் அல்ல; அது உயிரைப் பணையம் வைத்துச் செய்யப்படும் தியாகத்தின் வெளிப்பாடு என்பதை இவர்கள் நிரூபித்துள்ளனர்.”
மேலும், தீவுப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மருத்துவ சிகிச்சைக்காகச் சிறிய படகுகளில் அலைகளை எதிர்த்துப் பயணம் செய்யும் நிலையைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், கடைக்கோடிப் பகுதிகளுக்கும் சிறந்த மருத்துவ வசதிகள் சென்றடைவதை உறுதி செய்ய இச்சம்பவம் தனது உறுதியை வலுப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.





















