விண்வெளியில் ஒரு வீரர் இறந்துவிட்டால் உடலை இப்படித்தான் செய்வார்களாம்!

னிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது மிகவும் கடினமான செயல் மட்டுமல்ல, மிகவும் ஆபத்தான சவாலும் கூட என்பதில் சந்தேகமில்லை.

மனிதன் விண்வெளியை ஆய்வு செய்யத் தொடங்கி 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அப்போதிருந்து இதுவரை விண்வெளியில், 20 பேர் இறந்துள்ளனர். 1986 மற்றும் 2003 இல் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பிய விண்கலத்தில் 14 பேரும், 1971 சோயுஸ் 11 பயணத்தின் போது 3 பேரும், 1967 இல் அப்பல்லோ 1 ஏவுதளத்தில் 3 பேரும் இதில் அடங்குவர்.

விண்வெளிப் பயணம் அவ்வளவு சிக்கலானதாக இருந்த போதிலும் இதுவரை மிகச் சிலர் மட்டும் தான் விண்வெளியில் உயிரை இழந்துள்ளனர் என்பதையும் கவனிக்க வேண்டும்.

இச்சூழ்நிலையில், நாசா 2025-ம் ஆணடு நிலவுக்கு ஒரு குழுவையும், அடுத்த பத்தாண்டுகளில் செவ்வாய் கோளுக்கு ஒரு குழுவையும் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையம் போன்ற பூமிக்கு அருகில் இது போன்ற உயிரிழப் புகள் ஏற்பட்டால், மரணமடைந்தவரை அவரது குழுவினர் ஒரு சிறிய சாதனம் மூலம் சில நிமிடங்களில் அல்லது சில மணிநேரங்களில் பூமிக்கு அனுப்ப முடியும்.

அதே மரணம் சந்திரனில் நடந்தால், உயிரிழந்தவரின் குழுவினர் ஒரு சில நாட்களில் அவருடைய உடலுடன் வீடு திரும்பலாம்.நாசா ஏற்கனவே இதுபோன்ற நிகழ்வுகளை எதிர்கொள்வதற்காக விரிவான நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

அப்படி விரைவாக உடல் எடுத்துவரப்படும் போது, உடலைப் பாதுகாப்பது நாசாவின் முதன்மையான அக்கறை அல்ல. அதற்கு பதிலாக, மீதமுள்ள ஆராய்ச்சியாளர்கள் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்புவதை உறுதி செய்வதே நாசாவின் முதன்மையான நோக்கமாக இருக்கிறது.

செவ்வாய் கிரகத்திற்கு 300 மில்லியன் மைல் தூரம் பயணிக்கும் போது, ஒரு விண்வெளி வீரர் இறந்தால் அப்போது கையாள வேண்டிய நடைமுறைகள் வித்தி யாசமாக இருக்கும். அந்தச் சூழ்நிலையில் ஒருவர் உயிரிழந்தால், ஆராய்ச்சிக் குழுவி னர் திரும்பவும் பூமிக்கு வரமுடியாது.

 

அதற்கு பதிலாக, ஆராய்ச்சிப் பணிகள் நிறைவடைந்த பின் அக்குழுவினருடன், உயிரிழந்தவரின் உடல் பூமிக்குத் திரும்ப கொண்டுவரப்படும். இது இரண்டு ஆண்டு களுக்குப் பிறகு கூட இருக்கலாம். இந்த காலகட்டத்தில், ஒரு தனி அறை அல்லது தனியாக வடிவமைக்கப்பட்ட பையில் உடலைப் பாதுகாக்க குழுவினர் பொறுப் பெடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். விண்கலத்தின் உள்ளே நிலவும் நிலையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் உடலைப் பாதுகாக்க உதவும்.

சரியான விண்வெளி உடையின் பாதுகாப்பு இன்றிச் சென்றால் அந்த ஆராய்ச்சி யாளர் கிட்டத்தட்ட உடனடியாக இறந்துவிடுவார். உடலைச் சுற்றிலும் இருக்கும் காற்றழுத்தம் விண்வெளியில் இருக்காது என்பதாலும், விண்வெளியின் வெற்றி டத்தில் மனிதன் சுவாசிக்க முடியாத நிலை ஏற்படும் என்பதாலும் பாதுகாப்பான ஆடைகளை அணியாவிட்டால் உயிருடன் இருக்க முடியாது.

மேலும், இரத்தம் மற்றும் உடலில் உள்ள திரவங்கள் கொதிக்கத் தொடங்கிவிடும். விண்வெளி வீரர் ஒரு பாதுகாப்பான உடை இல்லாமல் சந்திரன் அல்லது செவ்வாய் கிரகத்திற்குச் சென்றால் என்ன அங்கு வளிமண்டலம் இல்லாததால் அல்லது மிகவும் மெல்லிய வளிமண்டலம் இருப்பதால் உயிர் வாழத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது.

இதன் விளைவாக, மூச்சுத் திணறல் மற்றும் ரத்தகொதிப்பு ஏற்படும். அதைத் தொடர்ந்து மரணம் சம்பவிக்கும்.

ஆராய்ச்சிக்காகச் செல்லும் ஒரு விண்வெளி வீரர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிறங்கிய பின்னர் உயிரிழந்தார் என வைத்துக்கொள்வோம். அவரது உடலை அங்கே தகனம் செய்வது செய்வது சிறந்த வழி அல்ல.

ஏனென்றால், அதற்கு வீரர்களிடம் இருக்கும் ஆற்றலைச் செலவிட வேண்டியிருக்கும். அது பிற வீரர்களின் தேவைகளுக்கு பற்றாக்குறையை ஏற்படுத்திவிடும். அதே நேரம் அந்த உடலை அடக்கம் செய்வதும் நல்ல யோசனை அல்ல.

அடக்கம் செய்யப்பட்ட அந்த உடலில் இருந்து பாக்டீரியா மற்றும் பிற உயிரினங்கள் செவ்வாய் கோளின் மேற்பரப்பை மாசுபடுத்தலாம். அதற்கு பதிலாக, ஆராய்ச்சிக் குழுவினர் அந்த உடலை பூமிக்கு திரும்பும் வரை தனியாக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு உடல் பையில் பாதுகாப்பார்ககளாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here