(டில்லிராணி முத்து)
லுமுட்:
கடற்படை வீரர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் நம் நாட்டின் பாதுகாப்பின் அடித்தளமாக இருக்கிறது. அவர்கள் கடலில், கடினமான சூழ்நிலைகளில் அலைகள், புயல்கள், இருள், தனிமை என எதையும் பொருட்படுத்தாமல் நாட்டை காக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்.
குடும்பத்தையும், தனிப்பட்ட வாழ்வையும் துறந்து அவர்கள் செய்யும் இந்த சேவை உண்மையிலேயே பெருமைக்குரியது. கடற்படை வீரர்கள் எல்லை பாதுகாப்பில் மட்டுமல்லாமல், இயற்கை பேரிடர்கள் நேரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். வெள்ளம், சுனாமி, புயல் போன்ற அவசர நிலைகளில் பொதுமக்களை மீட்கும் பணியில் அவர்கள் முன் நிற்கிறார்கள். அவர்களின் தைரியமும் விரைவான செயல்பாடும் பல உயிர்களை காப்பாற்றியுள்ளது என்றால் அது மிகையாகாது.
கடற்படை வீரர்கள் எதிர்கொள்ளும் தியாகம் என்பது உடல் உழைப்பை மட்டுமல்ல, மன உறுதியையும் தேவைப்படுத்துகிறது. நீண்ட நாட்கள் குடும்பத்திலிருந்து பிரிந்து கடலில் இருப்பது, கடுமையான சூழ்நிலைகளில் பணியாற்றுவது போன்றவை அவர்களின் தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். இருந்தும் அவர்கள் தங்களின் கடமையை தவறாமல் நிறைவேற்றுகிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
மொத்தத்தில், கடற்படை வீரர்கள் நம்மை பாதுகாக்கும் அமைதியான வீரர்கள். அவர்கள் செய்யும் சேவை நமக்கு அமைதியான வாழ்க்கையை வழங்குகிறது. அவர்களின் தியாகம் என்றும் நம் மனதில் மரியாதையுடன் நினைவில் இருக்க வேண்டியது.
இந்நிலையில் 92ஆவது கடற்படை தினத்தை முன்னிட்டு மலேசிய கடற்படை தளபதி லக்சமனா டான்ஸ்ரீ டாக்டர் ஸுல்ஹெல்மி பின் இத்நாய்ன் அவர்களின் தலைமையில் கடற்படை வீரர்களின் அணிவகுப்பு இன்று லுமுட் கடற்படை தளத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கடற்படை வீரர்களின் இந்த அணிவகுப்பு நிகழ்ச்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. தங்கள் நாட்டைப் பாதுகாக்கத் தன்னலமின்றி பணியாற்றும் கடற்படை வீரர்கள், ஒழுங்கும் ஒற்றுமையும் ஒளிரும் வகையில் அணிவகுப்பு நிகழ்த்தி அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.
அவர்களின் கட்டுப்பாடு, தன்னம்பிக்கை, வீர உணர்வு இந்நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த அணிவகுப்பு வெறும் நிகழ்ச்சி மட்டுமல்ல, நாட்டின் பாதுகாப்பிற்காக அர்ப்பணித்துள்ள வீரர்களின் தியாகத்தையும் பெருமையையும் வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சிப்பூர்வ தருணமாகவும் அமைந்தது.
கடல் எல்லைகளை காக்கும் தியாக தீபங்களான கடற்படை வீரர்களின் பெருமைகளை நாம் அனைவரும் போற்றி மதிக்கத்தான் வேண்டும்.











