பந்தாய் தாலம் அடுக்குமாடிக் குடியிருப்பில் குடிநுழைவுத் துறை சோதனை; பால்கனி வழியாக தப்ப முயன்ற வெளிநாட்டினர்!

கோலாலம்பூர்:

ந்தாய் தாலம் பகுதியில் உள்ள ஐந்து மாடி அடுக்குமாடி குடியிருப்பில் குடிநுழைவுத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையின் போது, கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க பல வெளிநாட்டினர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பால்கனி வழியாகக் கீழே இறங்கி தப்ப முயன்றனர்.

கோலாலம்பூர் குடிவரவுத் துறையினரால் நள்ளிரவு 12 மணியளவில் இந்தச் சோதனை தொடங்கப்பட்டது. அதிகாரிகள் உள்ளே நுழைந்தபோது, அங்கிருந்தவர்கள் கதவுகளைத் திறக்க மறுத்து உட்புறமாகப் பூட்டிக்கொண்டனர். அதிகாரிகள் கதவை உடைத்து உள்ளே நுழைய முற்பட்டபோது, சிலர் பால்கனி வழியாகப் பக்கத்து வீடுகளின் கீழ் தளங்களுக்குத் தப்பிச் செல்ல முயன்றனர்.

இருப்பினும், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் அனைத்து வெளியேறும் வழிகளையும் அதிகாரிகள் ஏற்கனவே மூடிவிட்டதால், அவர்களின் தப்பிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்தச் சோதனையின் போது மொத்தம் 90 பேர் ஆய்வு செய்யப்பட்டனர். அதில் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் பாகிஸ்தானியர்கள்: 29 ஆண்கள், இந்தோனேசியர்கள்: 9 ஆண்கள், 7 பெண்கள்
மற்றும் இந்தியர்: 1 ஆண் ஆகியோர் அடங்குவர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்பகுதியில் வெளிநாட்டினரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக 38 வயதான முகமட் ஷாரில் என்ற குடியிருப்பாளர் தெரிவித்தார். “இங்குள்ள வீடுகளின் வாடகை சுமார் RM800 என்பதால் வெளிநாட்டினர் அதிகளவில் குடியேறுகின்றனர். அவர்கள் பெரிய அளவில் தொந்தரவு கொடுக்காவிட்டாலும், பொது இடங்களில் எச்சில் துப்புவது மற்றும் சுகாதாரமற்ற முறையில் நடப்பது போன்ற செயல்களால் அசுத்தம் ஏற்படுகிறது” என்று அவர் தனது மன ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இத்தகைய அதிரடி சோதனைகள் தங்கள் குடியிருப்புப் பகுதியில் ஒழுங்கை நிலைநாட்ட உதவும் என்று உள்ளூர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here