கோலாலம்பூர்:
கடந்த மாதம் ஒரு பல்பொருள் அங்காடியில் இருந்து ஒரு கார்டன் பீர் மற்றும் ஒரு டின் பால் மாவைத் திருடிய தம்பதிக்கு, மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இன்று ஒரு வாரம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
43 வயதான எம். வனேஸ்வரி மற்றும் அவரது கணவர் 38 வயதான டி. சுகுமாரன் ஆகிய இருவர் மீதும் இந்தத் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி இரவு 8.22 மணியளவில், ஜின்ஜாங் (Jinjang) பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் குறித்த பல்பொருள் அங்காடியிலிருந்து ஒரு கார்டன் பீர் (மதிப்பு: RM153.80), ஒரு டின் பால் மாவு (மதிப்பு: RM98.50) என்பவற்றை திருடியதாகவும், திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு RM252.30 என்றும் கூறப்பட்டது.
நீதிமன்ற விசாரணையின் போது, திருடப்பட்ட பொருட்களை ரவாங்கில் உள்ள தனது முன்னாள் கணவரிடம் வெறும் RM65-க்கு விற்றதாக வனேஸ்வரி ஒப்புக்கொண்டார்.
மெஜிஸ்ட்ரேட் ஃபாரா நபீஹா முஹம்மது டான் (Farah Nabihah Muhamad Dan) முன்னிலையில் தம்பதியினர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் அவர்களுக்கு ஒரு வாரம் சிறை தண்டனையும் தலா RM300 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார், குறித்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக 5 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி கடை மேலாளர் சரக்குகளைச் சரிபார்த்தபோது திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது. சிசிடிவி (CCTV) காட்சிகளின் அடிப்படையில் செந்துல் மாவட்ட போலீஸ் தலைமையக அதிகாரிகள் தம்பதியினரை அவர்களது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
குற்றவியல் சட்டப்பிரிவு 380-ன் கீழ் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தம்பதியினர் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததை அடுத்து, குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.





















