கோலாலம்பூர்:
ஜோகூர், யோங் பெங் (Yong Peng) அருகே வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கிமீ 102.4-இல் (வடக்கு நோக்கிய திசை), விரைவுப் பேருந்து ஒன்று சாலை சீரமைப்பு இயந்திரத்தின் (Road milling machine) மீது மோதி விபத்துக்குள்ளானதில் 21 வயது தனியார் பல்கலைக்கழக மாணவி உட்பட மூவர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் அந்த மாணவியின் வாய்ப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக, மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் ஷாருலனுவார் முஷாத் அப்துல்லா சானி கூறினார், மேலும் 42 வயது பேருந்து ஓட்டுநருக்கு நெஞ்சுப் பகுதியில் காயம், 56 வயது பயணிக்கு தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டது என்றார் அவர்.
இந்தப் பேருந்து பண்டார் பெனாவர், கோத்தா திங்கியிலிருந்து கோலாலம்பூரை நோக்கி 26 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
நெடுஞ்சாலையில் கிமீ 101 முதல் கிமீ 103 வரை சாலை மறுசீரமைப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. மெதுவான பாதை (Slow lane) மற்றும் அவசரப் பாதை (Emergency lane) மூடப்பட்டிருந்த நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அங்கிருந்த சாலை சீரமைப்பு இயந்திரத்தின் மீது மோதியது.
அதிகாலை 1:05 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்று யோங் பெங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பேருந்து ஓட்டுநர் தனது இருக்கையில் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டார்.
காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக மூவாரில் உள்ள சுல்தானா பாத்திமா நிபுணத்துவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பேருந்திலிருந்த ஏனைய 14 ஆண்கள் மற்றும் 12 பெண்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
இந்த விபத்து தொடர்பாக, 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 43(1)-ன் கீழ் (கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டுதல்) காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.





















