கோலாலம்பூர்:
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படையின் (UNIFIL) தலைமையகத்திற்கு அருகிலுள்ள மலேசிய இராணுவ அதிகாரிகள் தங்கியிருந்த தளம் ஒன்றின் அருகே நேற்று சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
அடையாளம் தெரியாத ட்ரோன் (Drone) மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
லெபனானின் நக்குரா (Naqoura) பகுதியில் உள்ள மலேசிய இராணுவத்தினர் பயன்படுத்தும் தளம் அருகே இந்த வெடிப்பு நிகழ்ந்தது.
இந்தத் தாக்குதலால் கட்டிடங்களுக்குச் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதிர்ஷ்டவசமாக, மலேசிய இராணுவ வீரர்கள் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை.
வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த போது, மலேசிய நேரப்படி மாலை 5.30 மணியளவில் அனைத்து இராணுவ வீரர்களும் ஏற்கனவே பதுங்கு குழிகளில் (Bunkers) பாதுகாப்பாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மலேசிய பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் உறுதிப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.





















