விமானம் மூலம் வீசப்பட்ட உணவு பொட்டலம்.. மக்கள் தலைமீது விழுந்து காசாவில் 5 பேர் பரிதாப பலி

காசா: விமானத்திலிருந்து வீசப்பட்ட உணவு பொட்டலங்கள் அடங்கிய பெட்டி, பாலஸ்தீன மக்கள் மீது விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். உணவு பெட்டியின் பாராசூட் திறக்காததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.

பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் தனது போரை தீவிரப்படுத்தியுள்ளது. போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவும், சீனாவும் எவ்வளவு வலியுறுத்தியும் காது கொடுத்து கேட்காத இஸ்ரேல், அமெரிக்காவின் உதவியுடன் போரை உக்கிர கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதனால், தற்போது வரை 30,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று நடந்த மற்றொரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, போர் காரணமாக காசாவில் கடும் பஞ்சம் உருவாகியுள்ளது. போரினால் ஏற்படும் உயிரிழப்புகள் ஒருபுறம் இருந்தாலும், பட்டிணியால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. எனவே உணவு தட்டுப்பாட்டை போக்க மனிதாபிமான அடிப்படையில் உணவுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களாக விமானம் மூலம் உணவு பொட்டலங்கள் கொண்ட பெட்டிகள் காசாவுக்குள் வீசப்பட்டு வருகிறது. இந்த பெட்டிகள் பாராசூட் மூலம் தரையிறக்குகின்றன. நேற்றும் இப்படி சில பெட்டிகள் வீசப்பட்டன. ஆனால் இதில் சில பெட்டிகளின் பாராசூட்கள் திறக்கவில்லை. எனவே அசுர வேகத்தில் நிலப்பரப்பை நோக்கி வந்த இந்த பெட்டிகள், உணவுக்காக காத்திருந்தவர்களின் தலையில் விழுந்திருக்கிறது. இதில் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை காசா அரசு கடுமையாக விமர்சித்துள்ளது. “நாங்கள் ஏற்கெனவே இந்த திட்டத்தை பற்றி எச்சரித்திருந்தோம். மனிதாபிமான உதவிகள் என்கிற பெயரில் எங்கள் மக்களை மேலும் கொல்லாதீர்கள். நீங்கள் உண்மையில் எங்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தால், ராஃபா எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் உணவு டிரக்குகளை காசாவுக்குள் அனுப்புங்கள். நிலத்தின் வழியாக உணவு பொருட்களை கொடுங்கள்” என்று காசா கடுமையாக சாடியுள்ளது.

போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடன்படாததால், மேலும் சில நாட்களுக்கு காசா மீதான தாக்குதல்கள் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இது தற்போது இருக்கும் பசி, பட்டிணி பிரச்னையை மேலும் தீவிரமாக்கும் என ஐநா எச்சரித்திருக்கிறது. காசா மக்களுக்காக இனியும் எதையும் செய்யாமல் இருந்தால் நம் கண் முன்னரே பட்டிணியால் ஏராளமான பாலஸ்தீனர்கள் உயிரிழப்பார்கள் என்றும் ஐநா விவரித்திருக்கிறது. காசா மீதான இஸ்ரேலின் போர் கைவிடப்பட வேண்டும். உடனடியாக பாலஸ்தீன மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here