இணையச் சலுகை தருவதாகக் கூறி சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம் – போலீஸ் தீவிர விசாரணை

ஷா ஆலம்:

ஷா ஆலமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 14 வயது சிறுவன் ஒருவன் சிறைபிடிக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவனிடம், தனது மொபைல் போனுக்கு ‘இலவச இன்டர்நெட் பேக்கேஜ்’ தருவதாகக் கூறி அந்த நபர் ஆசை காட்டியுள்ளார். அதற்குப் பதிலாக, தனது வீட்டிற்கு வந்து சில பொருட்களைத் தூக்க உதவுமாறு அச்சிறுவனை அந்த நபர் அழைத்துள்ளார் என்று, ஷா ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் ரம்சே எம்போல் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை 8:05 மணியளவில் இருவரும் அடுக்குமாடி குடியிருப்புக்குள் செல்வது அங்குள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளில் பதிவாகியுள்ளது. வீட்டிற்குள் சென்றவுடன் சிறுவனின் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டு, அவர் பாலியல் வன்கொடுமைக்கு (Sodomised) ஆளாக்கப்பட்டதாகத் தெரிகிறது.

சுமார் மூன்று மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அந்த நபர் அங்கிருந்து சென்றவுடன் சிறுவன் தனது கட்டுகளைத் தானே அவிழ்த்துள்ளார். பின்னர் ஜன்னல் வழியாக உதவி கேட்டு சத்தமிட்ட சிறுவனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 342: தவறான முறையில் சிறைவைத்தல், பிரிவு 377C: இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் வன்கொடுமை செய்தல், பிரிவு 323: தானாக முன்வந்து காயப்படுத்துதல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் விசாரித்து வருகின்றனர். இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 முதல் 20 ஆண்டுகள் சிறை மற்றும் பிரம்படி தண்டனை வழங்க வாய்ப்புள்ளது.

தற்போது சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார், அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் புலனாய்வு அதிகாரி முகமது சப்ரியை 017-2892628 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here