புக்கிட் மெர்தாஜாம்:
பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் உள்ள ஜாலான் குவார் கெரிங் (Jalan Guar Kering) பகுதியில் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட கும்பலை குறிவைத்து போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 23 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இப்பகுதியில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி சாகசங்களில் ஈடுபடுவதாகவும், சத்தத்தை அதிகரிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட புகை வெளியேற்றக் குழாய்களைப் (Exhaust) பயன்படுத்தி பொதுமக்களின் அமைதியைக் குலைப்பதாகவும் போலீசாருக்குத் புகார்கள் குவிந்தன.
இதனைத் தொடர்ந்து, செப்ராங் பிறை தெங்கா மாவட்டக் காவற்படைத் தலைமையகத்தினர் அப்பகுதியில் தீவிரக் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நடவடிக்கையில் 60 மோட்டார் சைக்கிள்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. அவற்றில் 23 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக மொத்தம் 110 சம்மன்கள் விநியோகிக்கப்பட்டன.
“இளைஞர்கள் தங்களின் உயிரையும் மற்றவர்களின் பாதுகாப்பையும் அச்சுறுத்தும் இத்தகைய ஆபத்தான மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும். தங்களின் பிள்ளைகளின் நடமாட்டத்தை பெற்றோர்களும் பாதுகாவலர்களும் எப்போதும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்” எனப் போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.





















