80% லாபம் தருவதாக ஆசை வார்த்தை: தனியார் நிறுவன திட்ட மேற்பார்வையாளரிடம் RM200,400 சுருட்டிய மோசடி கும்பல்!

கோலாலம்பூர்:

லேசியாவில் ஆன்லைன் வழி முதலீட்டு மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், 80 விழுக்காடு வரை அதீத லாபம் தருவதாகக் கூறி நடத்தப்பட்ட போலியான ஐபிஓ (IPO) பங்குச் சந்தை முதலீட்டுத் திட்டத்தை நம்பி, 45 வயது தனியார் நிறுவன திட்ட மேற்பார்வையாளர் (Project Supervisor) ஒருவர் 200,400 ரிங்கிட்டை இழந்து திகைத்து நிற்கிறார்.

இச்சம்பவம் குறித்து நேற்று (மே 24) பாதிக்கப்பட்ட நபரால் போலீசில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொந்தியான் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்பிரண்டெண்ட் ஹத்ரத் ஹுசேன் மியோன் ஹுசேன் இன்று அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்த நபர் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி, பொந்தியான், தாமான் மெகா (Taman Megah) பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது இன்ஸ்டாகிராம் (Instagram) செயலியில் வந்த ஒரு லிங்க் (Link) மூலமாகப் பங்குச் சந்தை முதலீட்டுக் குழு ஒன்றில் இணைந்துள்ளார்.

அதன் பின்னர், அவர் ஒரு ரகசிய வாட்ஸ்அப் (WhatsApp) குழுவிற்கு மாற்றப்பட்டு, அங்கு அவர்களுக்குப் போலி ஐபிஓ முதலீடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, அந்த மோசடிக் கும்பல் கூறியபடி ஒரு போலி வர்த்தகச் செயலியை (Trading Application) அவரது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்துள்ளார்.

ஐபிஓ பங்குகளை வாங்குவதற்காக கடந்த மார்ச் 9 முதல் மே 19 வரையிலான காலகட்டத்தில், அந்த மோசடிக் கும்பல் கொடுத்த மூன்று (3) வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பல்வேறு கட்டங்களாக மொத்தம் 200,400 ரிங்கிட்டை அவர் ஆன்லைன் வழி அனுப்பியுள்ளார்.

அந்தச் செயலியின் கணக்கில் அவருக்கு 2.66 மில்லியன் ரிங்கிட் (RM2.66 Million) லாபம் வந்து சேர்ந்திருப்பது போன்ற ஒரு போலித் திரைக்காட்சி (Trading Balance) காட்டப்பட்டுள்ளது.

இதனால் மகிழ்ச்சியடைந்த அவர், தனது அசல் பணம் மற்றும் லாபத்தை வெளியில் எடுக்க (Withdraw) முயன்றபோதுதான் அக்கும்பலின் அராஜகம் வெளிவந்துள்ளது. அந்தப் பெரும் தொகையை எடுக்க வேண்டும் என்றால், கூடுதலாக 20 விழுக்காடு ‘அதிகாரப்பூர்வ கமிஷன்’ தொகையை முதலில் செலுத்த வேண்டும் என்று சந்தேக நபர்கள் மிரட்டியுள்ளனர்.

அவர்கள் கூறிய காரணங்கள் முற்றிலும் நம்பகத்தன்மை அற்றதாக இருந்ததாலும், தனது கணக்கில் காட்டிய RM2.66 மில்லியன் பணத்தை எடுக்க முடியாததாலும் தான் ஒரு மிகப் பெரிய ‘ஸ்கேம்’ (Scam) கும்பலிடம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் போலீசாரை நாடியுள்ளார்.

தற்போது இக்குற்றம், ஏமாற்று வேலைக்கான தண்டனைச் சட்டம் பிரிவு 420-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 1 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கச் சட்டத்தில் இடமுண்டு.

பொதுமக்கள் ஆன்லைன் வழி முதலீடுகளில் ஏமாறுவதைத் தவிர்க்கப் பொந்தியான் காவல்துறைத் தலைவர் ஹத்ரத் ஹுசேன் சில முக்கிய விழிப்புணர்வு வழிமுறைகளை மீண்டும் நினைவூட்டியுள்ளார்:

எந்தவொரு தெரியாத நபரின் வங்கிக் கணக்கிற்கும் பணத்தை அனுப்பும் முன்பு, அது வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் (CCID) ‘Semak Mule’ தளத்தில் கருப்புப் பட்டியலில் உள்ளதா எனச் சரிபார்க்க வேண்டும்.

மேலும் சந்தேகத்திற்குரிய எண்களில் இருந்து வரும் அழைப்புகளைக் கண்டறிய ‘Whoscall’ செயலியைப் பயன்படுத்த வேண்டும்.

அல்லது ஆன்லைன் பண மோசடிக்கு ஆளாகியிருப்பது தெரிந்த அடுத்த சில நிமிடங்களுக்குள், உடனடியாகத் தேசிய மோசடி மறுமொழி மையத்தின் (NSRC) 997 என்ற அவசர ஹாட்லைன் எண்ணிற்கு அழைத்தால் மட்டுமே, வங்கி அதிகாரிகள் அந்தப் பணப் பரிமாற்றத்தை முடக்கிப் பணத்தை மீட்க முடியும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here