சுங்கை சிப்புட் மக்களுக்கு விரைவில் விடிவுக்காலம்;டான் ஸ்ரீ விக்னேஸ்வரன்

சுங்கை சிப்புட் தொகுதி மக்களின் வாழ்வில் விரைவில் நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட வேண்டும் என்பதே தனது மனமார்ந்த பிரார்த்தனை என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார். மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெற்ற குடும்ப தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இந்நிகழ்வு கட்சி உறுப்பினர்களை மட்டும் ஒன்றிணைப்பதற்கானதல்ல எனவும் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தின் ஒற்றுமையை வலுப்படுத்துவதே அதன் பிரதான நோக்கம் எனவும் கூறினார்.

மஇகா தனது 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை சிறப்பு வழிபாடுகள் , பிரார்த்தனைகளுடன் தொடங்கியுள்ளதாகவும், அதன் தொடர்ச்சியாக குடும்ப தின நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் சிறப்பாக நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். பதவிகளோ அரசியல் அதிகாரங்களோ இல்லாத சூழலிலும், இந்திய சமுதாயத்தின் உரிமைகள் , நலன்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து செயல்பட்டு வரும் இயக்கம் மஇகா என அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் மாற்றங்களால் இந்திய சமுதாயம் பல்வேறு அனுபவங்களை சந்தித்துள்ளதாகவும், அதன் விளைவாக மீண்டும் மஇகாவை நோக்கி மக்கள் திரும்பி வருவதை காண முடிகிறது என்றும் அவர் கூறினார். இந்த நம்பிக்கையை பொறுப்புடன் பயன்படுத்தி, மக்களுக்கு தேவையான சேவைகளையும் உதவிகளையும் வழங்குவதில் மஇகா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

சுங்கை சிப்புட் தொகுதியைப் பொறுத்தவரை, கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த போதிலும், மக்களுக்கு சேவை செய்வதில் எந்த மாற்றமும் இல்லை என வருத்தம் தெரிவித்தார். “வெற்றி அல்லது தோல்வி என்பது அரசியலின் ஒரு பகுதி. ஆனால் மக்களுக்கு சேவை செய்வதே முக்கியம். சுங்கை சிப்புட் மக்களின் வாழ்வில் விரைவில் நல்லதொரு விடியல் மலர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை,” என அவர் தெரிவித்தார்.

இதனிடையே சுங்கை சிப்புட் ம இ கா தொகுதி ஏற்பாட்டில் நடைபெற்ற ம இ கா குடும்பத் தின விழாவை பல சிறமங்களுக்கு மத்தியில் சிறப்பாக செய்த அதன் தொகுதித் தலைவர் வி.சின்னராஜு அவர் தம் குழுவினரை டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் வெகுவாக பாராட்டினார். இந்நிகழ்வில் ம இ கா தலைவர்கள் உட்பட திரளான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

(எஸ்.லிங்கேஸ்வரன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here