“பெர்சத்துவை ஓரங்கட்டுகிறதா பாஸ்?” – மலாக்கா தேர்தல் சின்ன விவகாரத்தில் ‘உரிமை’ கட்சி கண்டனம்!

கோலாலம்பூர்:

பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் சின்னத்தில் அதன் அதிகாரப்பூர்வ உறுப்புக் கட்சிகள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற பாஸ் (PAS) கட்சியின் அறிவிப்புக்கு ‘உரிமை’ (Urimai) கட்சியின் தலைவர் பேராசிரியர் ப. இராமசாமி தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

பெர்சத்து (Bersatu) தலைவர் முஹிடின் யாசின் தலைமையிலான ‘இக்காதான் பிரியாதின் ராக்யாட்’ (IPR) கூட்டணியில் அங்கமாக இருக்கும் உரிமை கட்சி உள்ளிட்டவை, வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் பிஎன் (PN) சின்னத்தில் போட்டியிடலாம் என்று முஹிடின் கூறியிருந்தார். ஆனால், அதற்கு பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் உடனடியாக மறுப்பு தெரிவித்தார்.

இதற்குத் தனது முகநூல் (Facebook) பதிவின் மூலம் காரசாரமான பதிலடி கொடுத்துள்ள இராமசாமி, நாட்டின் எதிர்க்கட்சிகளின் போக்கை பாஸ் கட்சி மட்டுமே தன்னிச்சையாகத் தீர்மானிக்க முடியாது என்று சாடியுள்ளார்.

“கூட்டணிக்குள் பெர்சத்து கட்சியை அரசியல் ரீதியாக ஓரங்கட்டும் நோக்குடன்தான் பாஸ் கட்சி இத்தகைய உள்நோக்கத்தோடு செயல்படுகிறது. அதேவேளையில், பிஎன் கூட்டணியில் இணைவதற்கோ அல்லது அவர்களின் சின்னத்தைப் பெறுவதற்கோ எங்கள் ‘உரிமை’ கட்சி ஒன்றும் அவசரப்படவோ அல்லது ஏங்கித் தவிக்கவோ இல்லை,” என்றும் அவர் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

மலாக்கா மாநிலத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் சின்னம் தொடர்பாக பாஸ் மற்றும் பெர்சத்து இடையே நிலவி வரும் இந்த மோதல், மலேசிய அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here