சிரம்பான்:
கடந்த மே 24-ஆம் தேதி முதல் நேற்று வரை நடத்தப்பட்ட சிறப்பு ஹரிராயா ஹஜ்ஜு சோதனையின் போது, மொத்தம் 14,150 வாகனங்களை நெகிரி செம்பிலான் சாலைப் போக்குவரத்துத் துறை (RTD) அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். இதில் பல்வேறு விதிமீறல்களுக்காக 3,062 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில RTD இயக்குனர் ஜசிந்தர் சிங் சித்து இதுகுறித்து கூறுகையில், பரிசோதிக்கப்பட்ட வாகனங்களில் 1,673 வாகனங்கள் மீது 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அவற்றில் முக்கிய விதிமீறல்களுக்காக 1,055 வழக்குகள் பதியப்பட்டது. அவற்றில் இருகோட்டு பாதைகளில் முந்திச் செல்லுதல், வாகனத்தை ஓட்டும்போது கைபேசி பயன்படுத்துதல், சிவப்பு சைகை விளக்கை மதிக்காமல் செல்லுதல், பாதுகாப்பு பட்டை (Seatbelt) அணியாமல் இருத்தல் மற்றும் வரிசையை மீறி முந்திச் செல்லுதல் என்பன அடங்கும்.
மேலும் வாகன உரிமம் தொடர்பானவை (Road Tax): 686 வழக்குகள், தொழில்நுட்பக் குறைபாடுகள் (Technical): 406 வழக்குகள், ஓட்டுநர் உரிமம் இல்லாதது (Driving License): 317 வழக்குகள், சரக்கு வாகன விதிமீறல்கள்: 36 வழக்குகள், இதர குற்றங்கள்: 562 வழக்குகளும் பதியப்பட்டன.
இந்தச் சோதனையின் போது பல்வேறு கடுமையான விதிமீறல்களுக்காக மொத்தம் 73 வாகனங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் 71 வாகனங்கள் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழும், 2 வாகனங்கள் நிலப் பொதுப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், விதிமுறைகளை மீறியதற்காக 77 பேருந்து ஓட்டுநர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதோடு, பேருந்தின் பின் இருக்கைகளில் அமர்ந்து பாதுகாப்பு பட்டை அணியத் தவறிய 29 பயணிகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.




















