ஜெம்போல்:
நெகிரி செம்பிலான், ஜெம்போல் (Jempol) அருகே நேற்று இரவு கட்டுபாட்டை இழந்த கார் ஒன்று சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் மற்றொரு சகோதரர் பலத்த காயமடைந்தார்.
ஜாலான் பஹாவ் – கெமாயான் (Jalan Bahau-Kemayan) வழித்தடத்தின் 11-ஆவது கிலோமீட்டரில் நேற்று இரவு 8:40 மணியளவில் இந்தச் சோக விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) காரை மூத்த சகோதரர் (31) ஓட்டிச் சென்றுள்ளார். அவருடன் அவரது தம்பிகளான 27 மற்றும் 25 வயதுடைய இருவர் பயணித்துள்ளனர்.
அந்தச் சகோதரர்கள் மூவரும் நெகிரி செம்பிலானின் கோலா பிலாவில் (Kuala Pilah) இருந்து பகாங்கின் தெமர்லோ (Temerloh) நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி, அங்கிருந்த ஒரு மரத்தின் மீதும், வழிகாட்டிப் பலகையின் (Road Sign) மீதும் பலமாக மோதியுள்ளது. இந்தக் கொடூர விபத்தின் தாக்கத்தால் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது என்று, ஜெம்போல் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்பிரண்டெண்ட் நோர்ஹிஷாம் முஸ்தாபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மூத்த சகோதரனான 31 வயது ஓட்டுநர், தனியார் நிறுவனப் பாதுகாப்பு அதிகாரி. சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 25 வயதான இளைய சகோதரர், உயர்கல்வி நிறுவன மாணவர். இவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 27 வயதான மற்றொரு சகோதரர், காரின் முன் இருக்கையில் பயணித்தவர். படுகாயங்களுடன் ஜெம்போல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவப் பணியாளர்கள், கடுமையான காயங்களுக்குள்ளான ஓட்டுநரையும் அவரது இளைய தம்பியையும் சோதித்து, அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.இந்த விபத்து குறித்து சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987, பிரிவு 41(1)-ன் கீழ் (ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்துதல்) போலீசார் வழக்கைப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணை அதிகாரி முகமது ஃபஷா ஹைகல் முகமது ஃபைசலை 016-362 7746 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவலாம் எனப் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.





















