அலோர் ஸ்டார்:
மலேசியாவில் பல்வேறு திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் ‘ராமேஷ் கேங்’ (Rames Gang) என்ற குண்டர் கும்பலின் தலைவன் மீது, இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜி. ராமேஷ் (வயது 37) என்ற அந்த நபர், கடந்த ஜனவரி 2024 முதல் டிசம்பர் 4, 2025 வரையிலான காலகட்டத்தில், கோலா மூடா, கம்போங் சுங்கை டிவிஷன் பகுதியில் ‘ராமேஷ் கேங்’ என்ற பெயரில் சட்டவிரோதக் குற்றக் கும்பலை உருவாக்கி, அதில் உறுப்பினராகச் செயல்பட்டு வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்தக் குற்றம் தண்டனைச் சட்டம் பிரிவு 130V(1)-இன் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
நீதிபதி ஷர்மிலா அப்துல் சமத் முன்னிலையில் இந்தக் குற்றச்சாட்டு வாசித்துக் காட்டப்பட்டபோது, குற்றவாளி ராமேஷ் அதனைப் புரிந்து கொண்டதாகத் தலையசைத்தார். எனினும், இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் (High Court) அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், அவரிடம் இருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
இவ்வழக்கில் அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் வாட்சிரா வாங் ரூய் ஃபெர்ன் (Vatchira Wong Rui Fern) ஆஜரானார், பிரதிவாதி தரப்பில் வழக்கறிஞர் எஸ். சதீஷ் ஆஜராகி வாதாடினார்.
முன்னதாக, இந்திய மற்றும் தாய்லாந்து அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட ‘ஒப் தீகா’ (Op Tiga) என்ற சிறப்பு நடவடிக்கையின் கீழ், கடந்த மே 22 அன்று இந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
பேங்காக் நகரில் இருந்து இந்தியாவின் ஹைதராபாத் நகருக்குப் பறந்து கொண்டிருந்த விமானத்தில் வைத்து அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டதாகவும், பின்னர் இரு நாடுகளின் உதவியுடன் அவர் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைத் துறை (CID) இயக்குநர் டத்தோ எம். குமார் முன்னதாகத் தெரிவிதிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















