கோலாலம்பூர்:
மலேசியாவின் மக்கள் நீதிக் கட்சி (கெஅடிலான் – PKR) தனது மத்திய தலைமைத்துவ அமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கட்சியின் புதிய உதவித் தலைவர்களாக டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் மற்றும் டாக்டர் ஜலேஹா முஸ்தபா ஆகியோரை நியமித்துள்ளது.
ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில், கட்சியின் தேர்தல் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக இந்நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜொகூர், பத்து பகாட் நகரில் நடைபெற்ற கெஅடிலான் அரசியல் குழு மற்றும் மத்திய தலைமை மன்றத்தின் மாதாந்திரக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகக் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ஃபஹ்மி ஃபட்ஸில் தெரிவித்தார். கட்சியின் மத்திய காலக் கட்டமைப்பை ஒருங்கிணைக்கவும், பணிகளைச் சீரமைக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இதற்கு முன்பு கெஅடிலான் கட்சியின் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், டாக்டர் ஜலேஹா தற்போது ஜொகூர் மாநிலக் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
ஏற்கனவே நியமிக்கப்பட்ட உதவித் தலைவரான ரோலண்ட் எங்கனுடன் தற்போது சைபுடின் மற்றும் ஜலேஹா ஆகிய இருவரும் இணைகின்றனர் என்று ஃபஹ்மி ஃபட்ஸில் தனது அறிக்கையில் விவரித்துள்ளார்.





















