ஜோகூர் பாரு:
இங்குள்ள தாமான் டயாவில் (Taman Daya) அமைந்திருக்கும் சூராவ் (Surau) ஒன்றில், துணிப்பை (Tote bag) ஒன்றுக்குள் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று அநாதையாகக் கைவிடப்பட்டுக் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மதியம் 12 மணியளவில், 58 வயதுடைய நபர் ஒருவர் தொழுகைக்காக அந்த சூராவ்விற்குச் சென்றபோது, அங்கிருந்த காணிக்கைப் பெட்டியின் அருகே இந்தக் குழந்தை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தார்.
குழந்தை மீட்கப்பட்டது குறித்துப் புகார் பெறப்பட்டுள்ளதை ஜோகூர் பாரு (தெற்கு) மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அசிஸ்டெண்ட் கமிஷனர் ரவூப் செலாமாட் உறுதிப்படுத்தியுள்ளார்.
அங்குள்ள CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அந்தக் குழந்தையை அங்கு விட்டுச் சென்றது தெரியவந்துள்ளது. அந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் அந்த வாலிபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், குழந்தையின் உடலில் எந்தவித காயங்களும் இல்லை என்றும், தற்போது குழந்தையின் ஆரோக்கிய நிலை சீராக உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஏசிபி ரவுப் செலாமத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் ஹாட்லைன் எண்ணான 07-218 2323 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.




















